வேளாண் துறைக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான அதிகாரியை செயலாளராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சருக்கு விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது;
தமிழ்நாட்டில் வேளாண்துறை செயலாளர் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய செயலாளர் தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு முயற்சி செய்து வருகிறது.
மத்திய அரசின் கொள்கை அடிப்படையில் நிதி உணவு, நீர்ப்பாசனம், கூட்டுறவு, வருவாய், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் வகையில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தமிழ்நாட்டில் வேளாண் உற்பத்தி ஆணையர் என்கிற பதவி மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு தனி பதவியாக வழங்கப்பட்டு வந்தது. வேளாண் துறைக்கான செயலாளர் தனியாக நியமிக்கப்பட்டார். பிறகு மாற்றம் கொண்டுவரப்பட்டு வேளாண் உற்பத்தி ஆணையாளர் மற்றும் செயலாளராக நியமிக்கப்படுகிற வழக்கத்தை தமிழ்நாடு அரசு பின்பற்றி வருகிறது.
இந்நிலையில் நிதி, உணவுத்துறை, நீர்ப்பாசன துறை, பேரிடர் மேலாண்மை, போன்ற பல துறைகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்திலான செயலாளர்கள் நியமிக்கப்படும் போது வேளாண் துறைக்கு செயலாளர் நிலையில் அதிகாரி நியமிப்பது நிர்வாக ரீதியாக ஏற்றத்தாழ்வுகளையும், தாமதங்களையும் உருவாக்கும்.
குறிப்பாக வேளாண் பணி காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உணவு உற்பத்தி பெருக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவசரகாலமாக சில திட்டங்களை சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து நிறைவேற்றுகிற போது காலதாமதங்களும் தடைகளும் ஏற்றத்தாழ்வுகளும் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
மேலும், தற்போது வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யும்போது கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிக்கப்படுவது தான் பொருத்தமாக இருக்கும். அல்லது வேளாண் உற்பத்தி ஆணையாளர் என்கிற பதவிக்கு தனி உயர் அதிகாரி நியமிப்பதை தமிழ்நாடு அரசு கொள்கை பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
வேளாண் கொள்கைகளும் மத்திய அரசை சார்ந்து உள்ள நிலையில் அன்றாடம் மத்திய அரசின் உயர் அதிகாரிகளுக்கு இணையான பணி நிலையிலான தொடர்புடைய புலமைமிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும். உயர் அதிகாரிகள் நியமிக்கும்போது அரசியல், ஜாதி, மத, இன உணர்வுக்கு அப்பாற்பட்டு தகுதி திறமையின் அடிப்படையில் நியமனம் செய்வதை தமிழ்நாடு முதலமைச்சர் கண்டிப்புடன் பின்பற்ற முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
க.சண்முகவடிவேல்