காட்டுமன்னார்கோயில் தாலுக்கா வீராணம் உபரி நீர் திறப்பால் மூழ்கிப்போன 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை பேரிடர் பாதித்த கிராமங்களாக அறிவித்து 100% காப்பீடு இழப்பீடு பெற்று தர மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பேரிடர் மேலாண்மை குழு அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 26 ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்ட நடத்தவிருப்பதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் வீராணம் உபரி நீர் திறப்பால் மூழ்கிப்போய் பயிர்கள் அழிந்த இடையார், திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், கீழவன்னியூர், குமராட்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை நேரில் பார்வையிட்ட பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் தொடர்ந்து பெய்த பேரழிவு பெருமழையால் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மிகப்பெரும் பேரிழப்பை சந்தித்துள்ளது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவாரூர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளது. காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100% இழப்பீடு பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/post_attachments/627421fa-cf4.jpg)
காட்டுமன்னார்கோயில் தாலுகாவில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடந்த 10ம் தேதி முதல் ஒரு வார காலம் வீராணம் ஏரியில் திறக்கப்பட்ட உபரி நீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீரால் மூழ்கி சூழ்கட்டும் தருவாயில் இருந்த சம்பா பயிர்கள் பால் பிடிக்கும் தகுதியை இழந்துவிட்டது. இதனால் மிகப்பெரும் அழிவை விவசாயிகள் சந்தித்துள்ளனர்.
மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு தலைவரான கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு செயற்கைக்கோள் புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு பேரிடர் பாதித்த வருவாய் கிராமங்களை அடையாளம் கண்டு மாவட்ட அரசிதழில் வெளியிட வேண்டும். அதன் அடிப்படையில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 100 சதவீதம் இழப்பீடு பெற்று தருவதை சட்டப்படி உறுதி செய்திட வேண்டும்.
பேரிடர் மேலாண்மை திட்டத்தில் இடுபொருள் இழப்பீடாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஹெக்டர் ஒன்றுக்கு 17000 ரூபாய் எந்த வகையிலும் பொருத்தமற்றது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாக்க உதவாது. எனவே ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்குவதற்கு முதலமைச்சர் முன் வர வேண்டும்.
தென்பெண்ணை ஆற்று வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட கிராமங்களையும் பேரிடர் மேலாண்மை திட்டத்தில் பேரிடர் பாதித்த வருவாய் கிராமங்களாக அறிவித்து காப்பீடு செய்த விவசாயின் முழு இழப்பீடு பெற்றுத் தர முன்வர வேண்டும்.
தமிழ்நாடு அரசு வெள்ளத்தால் சூழப்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு தலா ரூ.2000 என்பது வேதனையை தருகிறது. தூத்துக்குடி. சென்னைக்கு ரூ.5000 முதல் 6000 வரை இழப்பீடு வழங்கிய தமிழ்நாடு அரசு, கடலூர் விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரூ.2000 என அறிவிப்பது பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்டது. எனவே, முதலமைச்சர் குடும்ப அட்டைக்கு ரூ.6000 வீதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கிட முன்வர வேண்டும். இதனை வலியுறுத்தி வரும் 26ஆம் தேதி காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளோம் என்றார்.
அப்போது, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு மாநில துணைச் செயலாளர் எம் செந்தில்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் மணிக்கொள்ளை ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர்கள் சிதம்பரம் சுரேஷ், அன்பழகன், லட்சுமி காந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“