கர்நாடக அரசை கண்டிக்காத தமிழக அரசை கண்டித்து நாளை காலை தஞ்சை ஆற்று பாலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு காவிரி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று தஞ்சையில் தெரிவித்துள்ளார்.
காவிரியின குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டி தமிழகத்தை அழிக்க உள்நோக்கோடு சட்ட விரோதமாக செயல்படுகிறது. தட்டி கேட்க வேண்டிய தமிழ்நாடு அரசு தவறிவிட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 18 வது கூட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகாவிற்கு ஆதரவாக மத்திய அரசு பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று ஆணையம் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசிடம் அனுமதி கோரி உள்ளது. இதனை நிராகரிக்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசிடம் பலமுறை மண்டியிட்டும் இதுவரையும் ஏற்கப்படவில்லை.
தற்போதைய நிலையில் கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வேகப்படுத்தி வருவதாகவும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மேகதாது அணையை கட்டி முடித்து விடுவோம் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், துணை முதலமைச்சர் டி.கே சிவகுமாரும் மாறி மாறி பேசி வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இதுவரையில் வாய் திறக்க மறுக்கிறார்.
இதன் மூலம் காவிரி டெல்டா விளை நிலங்களை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்ப்பதற்கு மறைமுக முயற்சியில் ஈடுபட்டுள்ளாரோ? என்று அஞ்சுகிறோம். ஏற்கனவே, குறிப்பாக நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பேரழிவு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சித்த முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மறைமுகமாக திட்டமிடுகிறாரோ? என்று அஞ்சத் தோன்றுகிறது.
எனவே, இதனை கண்டித்தும் உடனடியாக மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், உபரி நீர் கடலில் சென்று கலப்பதை தடுத்து நிறுத்தி ராசிமணலில் தமிழ்நாடு அரசு அணை கட்டுமானப் பணியை துவங்கிட வலியுறுத்தியும் நாளை 02.05 2024 வியாழன் அன்று காலை 10 மணி அளவில் தஞ்சாவூர் சாந்தபிள்ளை கேட் அருகே அமைந்துள்ள கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருக்கின்றோம்.
இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர்கள் திருச்சி பி.அய்யாக்கண்ணு, மகாதானபுரம் ராஜாராமன், ஸ்ரீரங்கம் தீட்சதர் பாலசுப்ரமணியன், நாமக்கல் பாலு, சேலம் தங்கராஜ், மதுரை எல்.ஆதிமூலம், நாகை எஸ் ஸ்ரீதர், துரைராஜ் நாயுடு, சீர்காழி சீனிவாசன், புதுச்சேரி மாநில தலைவர் காரைக்கால் ராஜேந்திரன், கடலூர் ராமச்சந்திரன், பயரி எஸ் கிருஷ்ணமணி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் முன்னணி தலைவர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்து கலந்துக்கொள்கின்றனர். இவ்வாறு பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“