/indian-express-tamil/media/media_files/2025/10/28/pr-pandian-pudukkottai-medical-waste-2025-10-28-21-42-22.jpeg)
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே பிசானத்துர் கிராமத்தில் மருத்துவக் கழிவுகள் மறுசுழற்சி ஆலைக்கு எதிராக நடைபெறும் 4வது நாள் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு உட்பட்ட பிசானத்தூர் கிராமத்தில் நாசக்கார மருத்துவ கழிவுகள் மறுசுழற்சி ஆலை அமைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. குறிப்பாக தஞ்சாவூர் மாநகர எல்லையில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது. இதனை சுற்றி கல்லூரிகள், மிகப்பெரும் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இக்கிராமத்தில் இருந்து எடுக்கப்படும் குடிநீர் தான் கந்தர்வகோட்டை நகரத்திற்கு வழங்கப்படுகிறது. சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. விளைநிலங்கள் முழுமையும் நிலத்தடி நீரை நம்பி சாகுபடி செய்து வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.
/indian-express-tamil/media/post_attachments/9fa556e6-e4c.jpg)
இத்திட்டம் இங்கு நிறைவேற்றப்பட்டால் ஒட்டுமொத்த மக்களும் வெளியேறும் சூழல் ஏற்படும். கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள் எல்லாம் வெளியேற்றப்படும். காற்று மாசடையும், குடிநீர் அழிந்து போகும், புற்றுநோய் தாக்குதல்கள் தீவிரமாகும். ஒட்டுமொத்தமாக இந்த மக்கள் அகதிகளாக வெளியேறக் கூடும் என்பதால் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மருத்துவக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வேண்டுமானால் மக்கள் வசிப்பிடம் இல்லாத இடத்தில் மாநகரங்கள், நகரங்களிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இது மாதிரியான திட்டங்களுக்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக குடியிருப்பு பகுதிகளில் நல்ல நிலத்தடி நீர் இருக்கிறது என்பதை காரணம் காட்டி நாசகார திட்டங்களுக்கு அனுமதி வழங்க தி.மு.க அரசு முன்வரக்கூடாது. முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும். பேரழிவு திட்டங்களுக்கு அனுமதிப்பதை கைவிட்டு இந்த பகுதி மக்களை காப்பாற்றுவதற்கு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் குரும்பூண்டி பத்மநாபன், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம் தெய்வமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us