குடி மராமத்து திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிடுமாறும், வரும் காலங்களில் மழை நீரை சேமிக்க அவசரகால நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் தெரிவித்திருப்பதாவது;
காவிரி டெல்டா மாவட்டங்கள் கடும் வறட்சியை சந்தித்து வருகின்றன. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக வெயிலின் கொடுமையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. மும்முனை மின்சாரம் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் கருகுவதைப் பார்த்து விவசாயிகள் மனமுடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கோடை சாகுபடி மேற்கொள்வது குறித்து முன்கூட்டியே உரிய முறையில் அறிவிப்புகள் செய்யப்படவில்லை. குறிப்பாக மின் தட்டுப்பாடு வரும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தும், விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கி சாகுபடி பருவமாற்றம் செய்திருக்க வேண்டும். அதற்கான எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசோ, வேளாண்மை துறையோ மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் விவசாயிகள் மிக பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
வேளாண்மை துறை விவசாயிகள் வேளாண் பணிகளை துவங்குவது குறித்து முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். அதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவது அவசியமாகிறது.
வேளாண்மைத்துறை பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.. விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பிற்கு தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும்.
தமிழ்நாடு முழுமையிலும் குளம் குட்டைகள் வறண்டு கிடக்கிறது. காவிரி டெல்டாவில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் வறண்டு கிடக்கிறது. கல்லணை வறண்டு பாலைவனமாக காட்சியளிப்பது வேதனையளிக்கிறது. தீ விபத்து ஏற்பட்டால் கூட அணைப்பதற்கு நீரின்றி அச்சபடும் நிலையில் வாழ வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, குடிமராமத்து திட்டத்தை உடனடியாக அமல்படுத்த அவசரகால நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தன் நிலத்தை செப்பனிடுவதற்கு கூட தன் நிலத்திலிருந்து மண்ணெடுத்துக் கொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாறாக தனியாருக்கு கட்டணம் செலுத்தி விட்டு மண் எடுக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்குமேயானால் கிடைத்த மழை நீரை சேமித்து வைத்திருக்க முடியும். ஏரி குளம் குட்டைகள் தூர்வாராததால் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஒரே நாளில் நடைபெற்று முடிந்து விட்டது. கடந்த 19 ஆம் தேதியே தேர்தல் முடிந்த நிலையில் ஜூன் மாதம் முதல் வாரம் வரையிலும் மக்களுக்கான திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது ஏற்கத்தக்கதல்ல.
தேர்தல் நடத்த விதிமுறை அமலில் உள்ளதால் அரசு திட்டங்கள் செயல்படுத்துவதிலும், வேளாண் வளர்ச்சித் திட்டங்கள் பல்வேறு மட்டங்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று அவசரகால பணிகளை மேற்கொள்வதற்கு நீர் பாசன துறை உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த பல்வேறு துறைகள் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது.
இதனால் வேளாண் பணிகள் துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக தேர்தல் ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்தி தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தை விதிமுறையில் இருந்து உரிய விளக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.