தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
தமிழ்நாட்டில் மேட்டூர் அணை 100 அடிக்கு மேல் நிரம்பியுள்ள நிலையில் வரும் ஜூன் 12ஆம் தேதி குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது. குறிப்பாக அணையில் இருக்கும் தண்ணீரை முறைப்படுத்தி குறுவை சாகுபடி முழுமையும் பாதுகாத்திட வேண்டும்.
சம்பா சாகுபடி துவக்க காலப் பணிகளுக்கு வடகிழக்கு பருவமழை துவங்கும் வரை பாசன நீர் தட்டுப்பாடின்றி கிடைத்திட தமிழக அரசு விவசாயிகளோடு கலந்து பேசி பாசனத்தை முறைபடுத்த வேண்டும். நடப்பாண்டு தூர் வாருவதற்கு முன்கூட்டியே நிதி விடுவிக்கப்பட்டும், இதுவரையிலும் தூர்வாரும் பணி எந்த ஒரு இடத்திலும் துவங்கப்படவில்லை. தண்ணீர் திறப்புக்கு முன் 100 சதவீதம் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அவசர காலத்தில் பணிகளை துவங்கி ஊழல் முறைகேடு செய்வதற்கு இடமளிக்கக் கூடாது.
தமிழக அரசு உயர் மட்டக் குழுவை அமைத்து தூர் வாரும் பணிகளை விரைந்து ஆய்வு செய்து குறிப்பிட்ட தேதியில் தொடங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிப்பதற்கான போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பணிகள் குறித்தான விவர விளம்பர பதாகைகள் தூர்வாரப்படும் இடங்களில் வைக்கப்பட வேண்டும்.
ஏற்கனவே ஷட்டர்கள் பராமரிப்பதற்கு தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது கோரையாறு, பாமணி ஆறு போன்ற வடிகால் ஆறுகளில் கதவணைகள் பராமரிக்கப்படாததால் தண்ணீரை வெள்ள காலங்களில் ஒழுங்குபடுத்துவது சவாலாக இருந்தது. இதனை கருத்தில் கொண்டு தற்போது அதனை பராமரிப்பதற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் இதுவரையிலும் துவங்கப்படவில்லை.
பராமரிப்பு பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்வதற்கான நிரந்தர அரசாணை உள்ளது. ஆனால் இதுவரையிலும் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பாசன மதகுகள் பராமரிப்பின்றி கிடைக்கின்றன. விரைந்து நிதியை ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் இரண்டாவது கட்ட நிதிக்கான அனுமதியை மத்திய அரசு கொடுக்க மறுத்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் மிகப்பெரிய வெள்ள நீர் வடிகால் ஆறுகளான பாமனியாறு, கோரையாறு உள்ளிட்ட அதன் துணை நதிகள் தூர்வாரப்படாமல், கரைகள் பலப்படுத்தப்படாமல் விவசாயம் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. எனவே மத்திய அரசு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி பெறுவதற்கான அனுமதியை விரைந்து வழங்குவதற்கு முன்வர வேண்டும்.
காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக செயல்பட்டு வருகிறது. அவர்களின் செயல்பாட்டை மறைமுகமாக மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் மேகதாட்டு அணை கட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிப்பதே அமைச்சர்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் ஆகும்.
அரசியல் லாபத்திற்காக மத்திய மாநில அரசுகள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை பிரதமர் அனுமதிக்க கூடாது. எனவே இது குறித்து பிரதமர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் கர்நாடக அரசின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை கண்டிக்க முன்வர வேண்டும் என்றார்.
க.சண்முகவடிவேல்