/indian-express-tamil/media/media_files/2025/01/28/CRPK4JHqFnJf11qIK6ae.jpeg)
கலைஞரின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை கார்ப்ரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மு.க.ஸ்டாலின் அரசின் அரசாணையை கைவிடாவிட்டால் திருக்குவளை கலைஞர் நினைவகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தமிழகம் முழுமையிலும் கைவிட்டு தனியாரை அனுமதிக்கும் அரசாணைக்கு எதிராக கலைஞர் பிறந்த திருக்குவளையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தியாவிலேயே முதன் முதலில் தமிழகத்தில் தான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் என்ற பொதுத் துறை நிறுவனத்தை 1972ல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவாக்கினார். அதன் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்கிற நெல்லை அரசு நிர்ணயிக்கும் விலையில் கொள்முதல் செய்யும் நோக்கோடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை 1975ல் கலைஞர் கொண்டு வந்தார்.
அன்று முதல் விவசாயிகளுடைய நெல் அரசால் கொள்முதல் செய்யும் உத்தரவாதம் கிடைத்தது. இரட்டைக் கொள்முதல் அனுமதிக்கப்பட்டதால் தனியார் வியாபாரிகள் அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் பட்சத்தில் விவசாயிகள் லாபகரமான விலை பெற்று வந்தனர்.
இந்நிலையில் தற்போது மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அத்திட்டத்தை தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு என்கிற நிறுவனம் மூலம் கார்ப்பரேட்டுகளும், தனியார் பெருநிறுவனங்களும் நெல் கொள்முதல் செய்வதற்கு அனுமதித்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கைவிடும் அரசாணையை வெளியிட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடப்பாண்டு முதல் தனியார் கொள்முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் கார்ப்பரேட்டுகளிடம் அடிமைப்படுத்தும் நடவடிக்கை துவங்கியுள்ளது.
இது முற்றிலும் விவசாயிகளுக்கு செய்கிற துரோகம் மட்டுமல்ல தன்னை பெற்றெடுத்து இந்த நாட்டிற்கு முதலமைச்சராக அறிமுகப்படுத்திய கலைஞருக்கு செய்கிற துரோகமாகும். எனவே பெற்ற மகனே தந்தைக்கு எதிராக துரோகம் செய்வதை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இதனை தோலுரித்துக் காட்டும் வகையில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கையில் எடுத்துள்ள மு.க ஸ்டாலினுக்கு எதிராக கலைஞர் பிறந்த திருக்குவளை மண்ணில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்றைக்கு போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழ்நாடு அரசின் அரசாணை நகலை தீயிட்டுக் கொழுத்தி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். உடனடியாக தமிழ்நாடு அரசு கார்ப்பரேட்டுகள் கொள்முதலில் அனுமதிப்பதை கொள்கை பூர்வமாக கைவிட்டு விவசாயிகளுக்கு நீதி வழங்க வேண்டும்.
திருக்குவளை பகுதியில் 2023 ஆம் ஆண்டு குறுவையை இழந்த விவசாயிகளுக்கு 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அரசு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரையிலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. உடனடியாக வழங்க வேண்டும். தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் மாறி பெய்த பேரழிவு பெருமழையால் சாய்ந்து அழுக தொடங்கி இருக்கிறது.
70% மகசூல் இழப்பை சந்தித்து விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். எனவே காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தருவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். நிபந்தனை இன்றி ஈரப்பதம் காரணம் காட்டாமல் கொள்முதல் செய்வதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அனுப்பி வைத்து டெல்டாவில் கொள்முதல் விரைவாக மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மறைமுகமாக கொள்முதலை கைவிடும் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத காரணங்களை சொல்லி கொள்முதல் செய்யாமல் 70% நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையிலே தொடர்கிறது. எனவே தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளை பாதுகாப்பதற்கு அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு செயலாளர் எஸ் ஸ்ரீதர், மாநில துணை செயலாளர் எம் செந்தில் குமார், திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் கமல்ராம், மாவட்ட கௌரவ தலைவர் கருணைநாதன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர். முன்னதாக வேதாரண்யம் பகுதி விவசாயிகள் ஏராளமானோர் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.