க.சண்முகவடிவேல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி தாலுகாக்களில் கடந்த 2022 நவம்பர் 11ஆம் தேதி வரலாறு காணாத பேரழிவு பெருமழை பெய்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் முழுமையும் 100 சதவீதம் அழிந்து போயின. இதனை முதலமைச்சர் நேரடியாக பார்வையிட்டார். இடுபொருள் இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். காப்பீடு திட்டத்தின் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 8 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது இதுவரையிலும் 50% விவசாயிகளுக்கு நிதிகள் சென்றடையவில்லை. இது குறித்து தமிழ்நாடு அரசு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. காப்பீடு நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி விவசாயிகளுக்கு சென்றடையவில்லை என்பதையும் கண்காணிக்கவில்லை.
இந்நிலையில், உற்பத்திக்கு பெற்ற கடனை வசூல் செய்ய கூட்டுறவு வங்கிகளும், தேசிய வங்கிகளும் விவசாயிகளை நிர்பந்தித்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாவட்ட ஆட்சியர் பரிந்துரை அடிப்படையில் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தோம்.
கடந்த ஜூன் 16ஆம் தேதி நீதிமன்றம் வங்கிகள் கடன் வசூலை நிறுத்தி வைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் அடிப்படையில் தரங்கம்பாடி, சீர்காழி தாலுகாக்களை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவித்து கடன்களை தள்ளுபடி செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
உத்தரவை நிறைவேற்ற இதுவரையிலும் தமிழ்நாடு அரசு முன்வரவில்லை. இதனை கண்டித்தும் உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளோம்.
இதனை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் விரைந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முன்வர வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இதனை மறுக்கும் பட்சத்தில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி கொள்ளிடம் கடை வீதியில் ஈசிஆர் சாலையில் அமர்ந்து 24 மணி நேரம் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என நாங்கள் எச்சரிக்கிறோம்.
மேலும், அவர் பேசுகையில், பருத்தி விவசாயிகள் விலை கிடைக்காமல் போராடுகிறார்கள். சம்பந்தப்பட்ட வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாக கள ஆய்வு செய்து அரசு நிர்ணயத்த விலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு பொறுப்பளித்து பருத்தி கொள்முதல் இடைத்தரகர்களின் ஊழல் முறைகேடுகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை இடைத்தரகர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள். அதிலிருந்து அவர்களை மீட்டு விவசாயிகளுக்கு உரிய விலையில் பருத்தி கொள்முதல் நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க துணை மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வைத்தியநாதன், செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வேட்டைங்குடி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் கொள்ளிடம் பன்னீர்செல்வம்,
திருவாரூர் மாவட்ட துணை செயலாளர் பொ.முகேஷ் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.