தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில, மாவட்ட, முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மன்னார்குடி சோழா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் எல். பழனியப்பன் தலைமையேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பி.ஆர்.பாண்டியன் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் சம்பா சாகுபடி பேரழிவு பெருமழையால் பெரும் பகுதியான மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு நெல் ஏக்கர் 1க்கு 25 ஆயிரம் ரூபாய் இடுப்பொருள இழப்பீடாக வழங்க வேண்டும். கரும்பு தென்னை வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் எண்ணெய வித்துக்களுக்கு உரிய இழப்பினை வழங்க முன்வரவேண்டும்.
கடந்த 2023 குருவை சாகுபடி பருவத்தில் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டதாகவும், ஹெக்டர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் இடுபொருள் இழப்பீடாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. நாகை மாவட்டத்திற்கு மட்டும் 30 ஆயிரம் ஏக்கருக்கு 16 கோடி ரூபாய் இழப்பீடாக அறிவித்துவிட்டு இதுவரையிலும் விவசாயிகளுக்கு இழப்பீடு சென்று சேரவில்லை. உடனே வழங்கக்கோரி விரைவில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் SKM (NP) அமைப்பு வரும் பிப்ரவரி 13-ம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது. இப்போராட்டத்தில் டெல்டா மாவட்டங்களிலிருந்து பெருமளவில் விவசாயிகள் பங்கேற்க முடிவெடுக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 என்கிற பெயரில் ஒட்டு மொத்த விளை நிலங்களையும், நீர் ஆதாரங்களையும் கார்ப்பரேட்டுகள் அபகரித்துக் கொள்ள வழி வகுக்கிறது. இதனை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் அந்த சட்டத்தை அரசு திரும்ப பெற மறுக்கிறது. மாறாக போராடும் விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் கொடுமை அரங்கேறி வருகிறது. இதனை திரும்ப பெற வலியுறுத்தி வரும் ஜனவரி 29-ம் தேதி SKM (NP)சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மாநிலம் தழுவிய அளவில் விவசாயிகள் பங்கேற்ற முற்றுகையிட உள்ளோம். இப்போராட்டத்தில் திருச்சி அய்யாக்கண்ணு, நான் உட்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய் 3500, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.5,000-ம் தமிழ்நாடு அரசு விலை நிர்ணயம் செய்து நடப்பு பருவத்தில் கொள்முதல் செய்ய வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு அரசு மாவட்டங்கள் தோறும் தனி நிர்வாக அலுவலகம் ஏற்படுத்தி பிரிமியம் செலுத்துவதிலும், உரிய காலத்தில் இழப்பீடை பெற்றுத் தருவதிலும் பொறுப்பேற்க முன் வரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்து உள்ளோம்.
அய்யாக்கண்ணு உள்ளிட்ட தலைவர்கள் விவசாயிகள் மீது 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த வழக்குகளை தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றங்கள் மூலம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பது கண்டிக்கத்தக்கது. திட்டமிட்டு விவசாயிகளை தமிழ்நாடு அரசு பழிவாங்க துடிக்கிறது. இதனை முதலமைச்சர் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்உட்பட பத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்றார்.
கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ணமணி, மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.வீரப்பன், கௌரவ தலைவர் திருப்பதி வாண்டையார், வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், மாவட்ட செயலாளர் சரவணன், நாகை மாவட்ட தலைவர் புலியூர் பாலு, மாவட்ட செயலாளர் கமல்ராமன், கௌரவத் தலைவர் கருணைநாதன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“