/indian-express-tamil/media/media_files/2025/09/19/pr-pandian-chengalpattu-press-meet-2025-09-19-19-32-52.jpg)
22% ஈரப்பத நெல் கொள்முதலுக்கு முதலமைச்சர் பொருப்பேற்க வேண்டும் என்று பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் செங்கல்பட்டு மாவட்டம் காயார், வெண்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பேரழிவு பெருமழையால் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டார்.
பின்னர், வெண்பேடு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சுமார் 15,000 சிப்பத்திற்கு மேல் கொட்டி வைக்கப்பட்டு மழை நீரில் அடித்துசெல்வதை பார்த்து கண்ணீர் விட்டு கதரும் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர், பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழகம் முழுமையிலும் குறுவை சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் துவங்கியுள்ளது. தமிழக அரசு நேரடி நெல் கொள்முதலை நடைமுறைப்படுத்தி வருகிறது.
காரீப் ரபீ பருவ கொள்முதல் கொள்கை தமிழக பருவ காலத்திற்கு ஏற்க தக்கதல்ல. எனவே இதற்கு மாற்றம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை அணுகிய போது பதிலளித்த மத்திய அரசு அதிகாரிகள் கொள்முதலில் ஈரப்பத அளவை கணக்கிட்டு கொள்வதும், தரத்தை உறுதி செய்து கொள்வதும் தமிழக அரசின் பொறுப்பாகும். மத்திய அரசுக்கும் நெல் கொள்முதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. கொள்முதல் செய்யும் நெல்லை அரிசியாக்கி அதனை முழுமையும் தமிழக அரசு பயன்படுத்தி வருகிறது. மத்திய தொகுப்பு தருவதில்லை. எனவே ஈரப்பதத்திற்கும், தரத்திற்கும் தமிழக அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தெரிவித்து விட்டனர்.
எனவே, மத்திய அரசை காரணம் காட்டி தற்போது மழை பெய்து வரும் நிலையில் அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரப்பதம் 16 சதவீதம் அளவில் இருந்தால் மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என மறுப்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
தமிழக முதலமைச்சர் கொள்முதல் செய்வதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அன்றாடம் கொள்முதல் செய்யக்கூடிய நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்து விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும்.
மழையால் பாதிக்கப்பட்டிருக்கிற விவசாயிகளுக்கு அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். உற்பத்தி பெருக்கத்திற்கு தன்னை மார்த்தட்டிக் கொள்கிற அரசுகள், விவசாயிகளின் இழப்பில் பங்கேற்பதற்கும் முன்வர வேண்டும்.
சென்ற ஆண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரையிலும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் நினைவில் கொள்ள வேண்டும்” என்று பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.
சென்னை மண்டல செயலாளர் இராஜசேகர், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லி ராம், துணை செயலாளர் சக்திவேல், துணை தலைவர் நெரும்பூர் பாலாஜி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் விவசாயிகள் உடன் இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.