Tamil Nadu | Cm Mk Stalin | Edappadi K Palaniswami: 'விடியா திமுக ஆட்சியை நம்பி உயிர் விட்ட விவசாயி எம்.கே.ராஜ்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரண உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்' என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:-
திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார் அவர்கள், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால், விவசாயக் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், 'தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்”, காய்ந்த குறுவை நெற்பயிர்களை விவசாயி ராஜ்குமார் அவர்களே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
தன்னுடைய ஆட்சியின் கெத்தை காட்டிக்கொள்ளும் எண்ணத்துடன், கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட்ட திரு. ஸ்டாலின், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே பாசனத்திற்கு தண்ணீர் தேவையை அறிந்து, நம்முடைய காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெறாமல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இன்றி, பயிர்கள் கருகிய பிறகு, 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல்', நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகு, காலம் கடந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது; மத்திய அமைச்சரைப் பார்ப்பது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு மற்றும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது என்று காலதாமதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலின், குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால், இன்று டெல்டா மாவட்டத்தில், திரு ஸ்டாலினின் சொந்த ஊரான திருக்குவளைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராஜ்குமார், கருகிய தன்னுடைய நெற்பயிருக்கு காப்பீட்டு நிவாரணமும், அரசின் நிவாரணமும் பெறமுடியாத நிலையில், மனவேதனையில், தன்னுடைய இன்னுயிரை இழந்துள்ளார்.
கையாலாக இந்த விடியா திமுக அரசின் செயல்பாட்டால், இன்னும் எத்தனை விவசாயிகள் தங்களது இன்னுயிரை இழக்கும் சூழ்நிலை ஏற்படுமோ என்று, மக்கள் அஞ்சும் அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. விவசாயி ராஜ்குமார் அவர்களின் மரணத்திற்கான முழு பொறுப்பை இந்த விடியா திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலினும் ஏற்க வேண்டும். உயிரிழந்த ராஜ்குமார் அவர்களின் குடும்பத்திற்கு, உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இந்த விடியா அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
விடியா திமுக ஆட்சியை நம்பி உயிர் விட்ட விவசாயி எம்.கே.ராஜ்குமார் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக 25 லட்சம் ரூபாய் வழங்கிட விடியா திமுக அரசை வலியுறுத்தல்!
— AIADMK (@AIADMKOfficial) September 25, 2023
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு.… pic.twitter.com/JuJI1zZoUN
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.