ராஜபாளையம் அருகே தேவதானம் சாஸ்தா கோவில் நீர்தேக்கம் அணை பருவ மழை காரணமாக முழு கொள்ளவு எட்டியதையடுத்து, அணை விவசாய பயன்பாட்டிற்க்காக இன்று (நவம்பர் 22) திறந்து வைக்கப்பட்டது. அணை திறப்பு நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, திமுக தங்கபாண்டியன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு அணையை திறந்தனர். அணை திறப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் திரும்பிக்கொண்டிருந்தபோது, அங்கே வந்த ஒரு நபர் திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் அங்கே பரப்பரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த அங்கே காவலுக்கு இருந்த காவலர்கள் விரைவாக செயல்பட்டு அந்த நபரை தடுத்து காப்பாற்றினார்கள்.
இதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு அந்த நபர் என்ன காரணத்துக்காக தீக்குளிக்க முயன்றார் என்று போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த நபர் தனது பெயர் கணேஷ் குமார் என்றும் அதே பகுதியில் தனக்கு சொந்தமாக உள்ள 2.5 ஏக்கர் நிலத்தை தென்காசி தொகுதி திமுக எம்.பி தனுஷ் எம் குமார் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக பரபரப்பு புகார் கூறினார்.
மேலும், கணேஷ் குமாரிடம் போலீசார் விசாரித்தபோது பரபரப்பு தகவல் வெளியானது.
விருதுநகர் மாவட்டம், தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தில் குடும்பத்தினருடன் விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது விவசாய நிலத்தின் அருகே தென்காசி தொகுதி திமுக எம்.பி தனுஷ் எம் குமார் நிலம் உள்ளது.
இந்த நிலையில், திமுக எம்.பி தனுஷ் எம் குமார் தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், தனது விவசாய நிலத்திற்கு செல்ல பாதையில்லை. இதையடுத்து, தனது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2.5 ஏக்கர் விவசாய நிலத்தை திமுக எம்பி தனுஷ் எம் குமார் தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடு என கொலை மிரட்டல் விடுத்ததாக பரபரப்பு புகார் கூறினார்.
அதுமட்டுமில்லாமல், கணேஷ் குமார், தான் பார்த்து வந்த நீர்தேக்க அணை காவலாளி பணியை திமுக எம்.பி தனுஷ் எம் குமார் தனது அதிகாரத்தைப் பயனப்டுத்தி சஸ்பெண்ட் செய்ய வைத்தார் என்று குற்றம்சாட்டினார். இதையடுத்து தான் தற்கொலைக்கு முயன்றதாக கணேஷ் குமார் கூறினார்.
திமுக எம்.பி நில அபகரிப்பு செய்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் முன்பு தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்திய கணேஷ் குமாரை மாவட்ட ஆட்சி தலைவர் மேகநாத ரெட்டி அழைத்து பேசினார்.
கணேஷ் குமார், மாவட்ட ஆட்சியரிடம் தனது விவசாய நிலம் தொடர்பான உரிய ஆவணங்கள் அனைத்தும் தன்னிடம் உள்ளது என்றும் நிலத்தை அளக்க சர்வேயரிடம் இரண்டு முறை மனு கொடுத்தும் வரவில்லை என்றும் தெரிவித்தார். கணேஷ் குமாரின் புகாரைக் கேட்ட மாவட்ட ஆட்சிய மேகநாத ரெட்டி, இது பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர், கணேஷ் குமாரிடம் தற்கொலை முயற்சியில் ஈடுபட வேண்டாம் என அறிவுரை கூறினார்.
திமுக எம்பி தனுஷ் எம் குமார் நில அபகரிப்பு செய்துள்ளதாக புகார் கூறி மாவட்ட ஆட்சியர் வாகனம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பியதற்கு தனுஷ் எம் குமார் எம்.பி பதிலளித்துள்ளார்.
கணேஷ் குமார் தனது நெருக்கமான உறவினர் என்றும் அவரது இடத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை பணம் கொடுத்து வாங்கிவிட்டார் என்றும் தற்போது தனது குடும்பத்தினர் அங்கே விவசாயம் செய்து வருவதாகக் கூறினார். நிலம் வாங்கிய விவகாரம் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியும் என்று கூறிய தனுஷ் எம் குமார், தற்போது கணேஷ் குமார் அந்த நிலத்துக்கு ஏதாவது பணம் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறார். அதைகூட நேரடியாக வந்து என்னிடமோ எனது குடும்பத்தினரிடமோ கேட்டிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, அவர் ஏன் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார் என்று தெரியவில்லை என்று கூறினார்.
மேலும், கணேஷ் குமார் பார்த்து வந்த நீர்த்தேக்கத்தின் தற்காலிக காவலாளி பணியை சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக ஊடகங்களின் கேல்விக்கு பதிலளித்துள்ள திமுக எம்.பி தனுஷ் எம் குமார், “நீர்த்தேக்க தொழிலாளியாகப் தற்காலிக பணியில் இருந்து வந்த கணேஷ்குமார், அங்குள்ள சேர்வராயன் குளத்தின் அருகில் இருக்கும் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்கிறார். குளத்தில் தண்ணீர் நிறைந்துவிட்டால் நிலத்துக்குள் தண்ணீர் வந்துவிடும். அதனால், விவசாயம் செய்ய முடியாது என்பதால் குளத்தின் ஷட்டரை உடைத்து தண்ணீரை வெளியேற்றிவிட்டார்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கிராம பொது மக்களும் அவர் மீது காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், அவரை தற்காலிக பணியாளர் வேலையில் இருந்து நீக்கியிருக்கலாம். ஆனால், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டதற்கு என் மீது புகார் சொல்கிறார். அவர் தேவையில்லாமல், எதற்காக என் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு கூறுகிறார் என்று தெரியவில்லை” என்று திமுக எம்.பி தனுஷ் எம் குமார் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.