சுதந்திர தினத்தன்று அரசியல் சார்பற்ற ஐக்கிய விவசாய சங்கம் சார்பில் மத்திய மோடி அரசிற்கு எதிராக நாடு முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெற்றது. இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இந்த பேரணியானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொள்ளாச்சி காவல் ஆய்வாளர், காரமடை காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் பேரணிக்கு அனுமதி மறுத்து டிராக்டர் பேரணியை தடுத்து நிறுத்தி விவசாயிகளை கைது செய்தனர். இதில் பெண் விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாராயண சாமி நாயுடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் உட்பட 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பி.ஆர்.பாண்டியன், "சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த பேரணியை தடுத்து நிறுத்திய இரண்டு காவல் ஆய்வாளர்களும் டிராக்டர்கள், மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்ததோடு பெண் விவசாயிகளையும் கைது செய்து மாலை 7:30 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
தமிழ்நாடு காவல்துறையானது விவசாயிகளை முதலமைச்சர் ஸ்டாலின் அரசுக்கு எதிராக தீவிரப்படுத்த முயற்சிக்கிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் திமுக அரசு விவசாயிகளுக்கு சாதகமாகவும் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்குமென்றால் சம்பந்தப்பட்ட இரண்டு காவல் ஆய்வாளர்களையும் உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் காவல் கண்காணிப்பாளர் கூறியதன் பேரில்தான் அந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது என்ற தகவல் வந்தது.
உண்மையானால் அவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தீவிரப்படுத்துவோம் எனவும் தாங்கள் கூறியது நிறைவேற்றப்படாத பட்சத்தில் வருகின்ற 27ஆம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிக்கு வருகை புரிய இருக்கும் டெல்லி தலைவர்கள் கவனத்திற்கு இதனை கொண்டு செல்வோம்" என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“