குடிநீர் என்கிற பெயரால் வேளாண்மையை விட்டு விவசாயிகள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசனம் குறித்து அரசின் கொள்கை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடி சுமார் 18 லட்சம் ஏக்கரில் 10 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வேண்டுகோளை ஏற்று தரிசாக கிடந்த நிலங்கள் முழுமையும் கடந்த இரண்டு தினங்களாக பருவமழையை பயன்படுத்தி சம்பா தாளடி சாகுபடி பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
டிசம்பர், ஜனவரி மாதங்கள் முழுமையும் கோடைகாலமாக இருக்கும் நிலையில் பாசன நீரை தமிழ்நாடு அரசு விடுவிக்குமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அணைகள் முழுமையும் குடிநீருக்கு முன்னுரிமை கொடுத்து பாசனத்திற்கு தண்ணீர் விடுவது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வைகையில் தண்ணீர் திறக்க மறுப்பதால் விவசாயிகள் திருமங்கலம், மேலூர் பாசன பகுதிகளுக்கு பாசன நீர் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு குடிநீருக்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாக கூறி விவசாயத்திற்கு தண்ணீர் தர மறுப்பதால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் விவசாயம் அடியோடு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரிசி உற்பத்தி மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கப் போகிறது. குடிநீர் என்கிற பெயரால் வேளாண்மையை விட்டு விவசாயிகள் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பாசனம் குறித்து அரசின் கொள்கை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும்.
காவிரி டெல்டா முழுமையிலும் 6 லட்சம் விவசாயிகள் மட்டுமே இது நாள் வரை காப்பீடு செய்துள்ளதாக தெரிய வருகிறது. நவம்பர் 15 ஆம் தேதியோடு இறுதி கெடு முடிவடைய உள்ள நிலையில் தீபாவளி பண்டிகை விடுப்பும் வருகிறது. காப்பீடு செய்வதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து விரைவுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
பாதிக்கப்படுகிற ஆண்டுகளில் தமிழ்நாடு அரசே காப்பீட்டுக்கான விவசாயிகளின் பிரீமியம் பங்கு தொகையை முழுவதும் அரசு செலுத்துவதை கடமையாகக் கொண்டுள்ள நிலையில், நடப்பாண்டு தமிழ்நாடு அரசு வாய் திறக்க மறுப்பது ஏமாற்றமளிக்கிறது.
முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மத்திய அரசின் தேசிய பாறைகள் மற்றும் இயந்திரவியல் துறை ஆய்வு மேற்கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அணை தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதா? அப்படி தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அணை பாதுகாப்பாக உள்ளது என்றால் ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளதா? இல்லை மத்திய அரசு தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமலேயே ஆய்வுகளை மேற்கொள்கிறதா? அல்லது கேரளா அரசு உள்நோக்கத்தோடு ஆய்வு செய்வதற்கு முயற்சிக்கிறதா? என்பது குறித்து விவசாயிகள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பும், சந்தேகமும் அச்சமும் எழுந்துள்ளது.
ஆய்வின் மூலம் அணைக்கு ஆபத்து ஏற்படுமோ? என்று அஞ்ச தோன்றுகிறது. தமிழ்நாடு அரசு உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். அணையை தமிழ்நாடு அரசு தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். தேவையானால் மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பை பெற்று அணையை பாதுகாக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நெய்வேலியில் கர்நாடகாவுக்கு எதிராக காவிரி உரிமையை மீட்பதற்காக வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி நிலக்கரி சுரங்கம் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு பி.ஆர் பாண்டியன் கூறினார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.