தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் திருவாரூரில் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
காவிரி டெல்டாவில் மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை சாகுபடி தீவிரம் அடைந்து வருகிறது. கூட்டுறவு கடன் கொடுப்பதற்கு கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி நிபந்தனைகளைச் சொல்லி தட்டிக் கழிக்கிறார்கள். பான்கார்டு, சிபில் ஸ்கோர் உள்ளிட்ட12 சான்றுகள் கேட்டு கட்டாயப்படுத்துகிறார்கள். வட்டியை செலுத்தி கடனை புதுப்பிக்கும் நடைமுறையை கூட்டுறவு வங்கிகள் முற்றிலும் கைவிட்டுள்ளனர்.
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் கூட்டுறவு வாங்கிகளுக்கு பொருந்தாது என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியக்கருப்பன் அறிவிக்கிறார். அவருக்கு கீழ் செயல்படும் கூட்டுறவு துறை பதிவாளரோ, சிபில் ஸ்கோர் மற்றும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பின்பற்றி தான் விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்புவது நகைச்சுவையாக உள்ளது.
குறுவை, சம்பா சாகுபடிக்கு உரத் தட்டுப்பாடு ஏற்படும் என வெளி வருகிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஓராண்டுக்கு தேவையான உரங்கள் கையில் இருக்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்று தர வேளாண்துறை மறுக்கிறது. குறிப்பாக காப்பீட்டு நிறுவனங்களில் அதிகாரம் படைத்த அரசியல் கட்சி குடும்பங்கள் பங்குதாரராக உள்ளதாக கூறி வேளாண் அதிகாரிகள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு துணை போகிறார்கள்.
பாதிக்கப்படும் விவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள். வடபாதிமங்களம் ஆரூரான் சர்க்கரை ஆலைக்கு சொந்தமான நிலங்களை கைப்பற்றி சிப்காட் அமைத்து வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்க மறுப்பது ஏன்?
மேகதாது அணை கட்டுமானத்திற்கான அலுவலகம் உள்ளிட்ட அடிப்படை பணிகளை துவங்கி விட்டதாகவும், மத்திய அரசு அனுமதி தந்தால் அணை கட்டுமானப்பணி துவங்கிவிடும் என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் அறிவித்தார். இதற்கு பதில் அளித்த கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர் குமாரசாமி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட முடியாது. எனவே, காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க தமிழகத்தை ஆட்சி செய்வதால் அவர்களிடம் ஒப்புதல் பெற்று கொடுத்தால், மத்திய அரசின் அனுமதி உடனடியாக பெற்று தரப்படும் என கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து, டி.கே சிவகுமார் அணை கட்டுமானப் பணி துவங்கி விட்டதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் மவுனம் கர்நாடகாவிற்கு அனுமதி கொடுத்துவிட்டதோ? என விவசாயிகள் அஞ்சுகிறார்கள். இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும், நாகப்பட்டினத்தில் முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ரூ.32 கோடி ரூபாய் பாசனம் கட்டுமானங்களை சீரமைப்பதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்தார்.
சட்டமன்றத்தில் கதவனைகள் சீரமைப்பதற்கு ரூ 18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையிலும் அதற்கான அரசாணைகளோ, நிதி ஒதுக்கீடோ செய்ய முன்வரவில்லை. இதனால் பாசனமும், மழைக்காலங்களில் வெள்ள நீர் வடிவதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
ஓஎன்ஜிசி இயற்கை எரிவாயு கச்சா எடுக்கிறேன் என்கிற பெயரில் விளைநிலங்களை பாழ்படுத்தியது, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு எரிவாயு குழாய்களில் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் கச்சா எண்ணெய் கசிவால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. இது குறித்தான ஆய்வுக்கு சுல்தான் இஸ்மாயில் தலைமையில் தமிழக அரசு ஆய்வு குழு அமைத்தது. இக்குழு ஆய்வு செய்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் இதுவரையிலும் ஆய்வு அறிக்கை குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
மாறாக ஓஎன்ஜிசி யின் அத்துமீறிய நடவடிக்கைகள் குத்தாலத்தில் தொடர்வதால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பருத்தி, மா பயிரிட்ட விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரிகள் துணையுடன் இடைத்தரகர்கள் அடிமாட்டு விலைக்கு கொள்முதல் செய்வதையே கொள்கையாக கொண்டு உள்ளனர். எனவே, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் விலை நிர்ணயக் குழுக்கள் அமைத்து உற்பத்தி செய்யும் இடங்களில் நியாயமான விலையில் கொள்முதல் செய்திடவும், சந்தைப்படுத்தும் இடத்தில் உரிய விலையில் சந்தைப்படுத்துவதைகண்காணிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தியும் ஏற்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.
கடன் வசூல் என்கிற பேரில் கிராமப்புறங்களில் கந்துவட்டி கொடுமை தீவிரமடைந்துள்ளது. கடன் வசூல் குறித்து புதிய சட்டம் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடன் வசூல் மிரட்டல்களால் விவசாயிகளின் தற்கொலைகள் தீவிரமடைந்துள்ளது. கிராமப்புற மாணவர்களின் கல்விக்கடன் தடுத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது இதுவரையிலும் அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3500 ம், கரும்பு டன் ஒன்றுக்கு ரூபாய் 5,000 ம் உடன் வழங்க முன்வர வேண்டும். நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்த்ததின் மூலம் நெல்லுக்கான கொள்முதல் உத்தரவாதமும் பறிபோய் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில்10 வேளாண் உதவி இயக்குனர்கள் இருக்க வேண்டும் ஒரு இடத்தில் மட்டுமே செயலாட்டுகிறார். 9 இடம் காலியாக உள்ளது.வேளாண் பல்கலைக்கழக அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது இதுவரையிலும் அமைக்கப்படவில்லை. மாறாக அருப்புக்கோட்டை கோவிலாகுளம் வேளாண் கல்லூரிக்கு சொந்தமான 138 ஏக்கர் நிலத்தை சிப்காட் அமைப்பதற்கு கையகப்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தன்னை டெல்டாக்காரன் என்று விளம்பரப்படுத்த முயலும் முதலமைச்சர், விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
எனவே, இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
தமிழக முதலமைச்சர் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில் மேற்கண்ட கேள்விகளை தமிழக முதலமைச்சருக்கு
பி.ஆர் பாண்டியன் முன் வைத்துள்ளது டெல்டா விவசாயிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி:க.சண்முகவடிவேல்.