தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பாசனப்பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்வதற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒரு சில பாசன ஆறுகளில் கடைமடை வரையிலும் தண்ணீர் சென்றடைந்துள்ளது. கிளை ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படவில்லை. விரைவில் தண்ணீர் திறக்கப்பட்டு பாசனப் பகுதிகளில் கொண்டு சேர்க்க அதிகாரிகள் முன் வர வேண்டும். அதற்கான வகையில் நீர்ப்பாசன துறையை தன்னாட்சி அதிகாரமிக்க துறையாக அனுமதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். தண்ணீரை பகிர்ந்து அளிக்கும் அதிகாரம் நீர்ப்பாசன பொறியாளருக்கு வழங்க வேண்டும்.
நீடாமங்கலம் மூணாறு தலைப்பில் வெண்ணாறு, கோறையறு,பாமணி ஆறுகளில் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்படுவதை நேரில் பார்வையிட்டார். பின்னர் வலங்கைமாண் , குடவாசல், , திருவாரூர் பகுதிகளில் ஆறுகளில் தண்ணீர் திறக்கப்படாதது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். குடவாசல் பகுதியில் விடயல் கருப்பூரில் காவிரி நீர்பாசன விரிவாக்கம் மற்றும் புனரமைப்பு பராமரிப்பு திட்டம் -2021 ம்ஆண்டின் திட்டத்தின் கீழ் ரூ 450 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து வெளிப்படையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விடயல் கருப்பூரில் சோழசிராமணி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கு பணிகளை விரைந்து முடித்து ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கு நீர் பாசனத்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .என கேட்டுக்கொண்டார். அனைத்து ஆறுகளிலும் குறைந்தபட்ச பாசன கொள்ளளவு நீரை விடுவிக்க நீர் பாசனத்துறை விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
வேளாண்துறை மானிய விலையில் குறுகிய கால விதைகள் கையிருப்பில் உள்ளது குறித்து உரிய வெளிப்படையான அறிக்கை வெளியிட முன்வர வேண்டும்.
கூட்டுறவு வங்கிகள் கடன் கொடுப்பதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது ஏற்க இயலாது. கூட்டுறவுத்துறை அமைச்சரின் அறிவிப்பிற்கும் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டிற்கும் மிகுந்த வேறுபாடு இருக்கிறது.இது குறித்து முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி என பெயர் மாற்றியதினுடைய விளைவு விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன் பெறுவது எட்டாக்கனியாகிவிட்டது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கடன் இலகுவான வகையில் பெறுவதற்கான நடவடிக்கை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் துறை கூட்டுறவுத்துறை நீர்ப்பாசன துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் விவசாயிகள் கொண்ட கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தி சாகுபடி தீவிரப் படுத்துவதற்கு தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது திருவாரூர் மாவட்ட செயலர் குடவாசல் சரவணன், குடவாசல் ஒன்றிய செயலாளர் நாகராஜன், உயர் மட்டக்குழு உறுப்பினர்கள் சுவாமிநாதன், , கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் நீர் பாசனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.