சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் அமைக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் தாலுகாவுக்கு உட்பட்ட வளத்தூர், பரந்தூர், 144 தண்டலம், நெல்வாய், மேல்படவூர், மடப்புரம், மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட ஏகனாபுரம், எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி என 12 கிராம பகுதிகளில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னையின் 2வது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கிராம மக்களின் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஏகனாபுரம் கிராம மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து ஆதரவு தெரிவிக்க தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வருவதாக தகவல் வெளியானது.
பி.ஆர். பாண்டியன் உரிய அனுமதி பெறாமல் ஏகனாபுரம் கிராம மக்களை சந்திக்க வருவது குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுதாகர் தலைமையில் தலைமையில் ஏராளமான போலீசார் பரந்தூர், ஏகனாபுரம், கண்ணன்தாங்கல், நெல்வாய், உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சென்னை – பெங்களூரு சாலையை ஒட்டியுள்ள நீர்வள்ளூர் கிராம பகுதி வழியாக காரில் வந்த பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் வி.கே.வி துரைசாமி, சைதை சிவா உள்ளிட்ட 3 பேரையும் காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
புதிய விமான நிலயையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் ஏகனாபுரம் மக்களை சந்திக்க உரிய அனுமதி பெறாமல் சென்ற பி.ஆர். பாண்டிய உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம், B-6 மாகரல் காஞ்சிபுரம் – காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன்,சென்னை மண்டல தலைவர் வி.கே.வி துரைசாமி, செயலாளர் சைதை சிவா ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட பின்னர், பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கிற நடவடிக்கையில் விளைநிலங்களையும் வீடுகளையும் கையகப்படுத்துகிற நடவடிக்கையில் விவசாயிகளுக்கும் அரசுக்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நேரில் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும். அவர்களுடைய விருப்பத்தையும் இருக்கிற பிரச்னைகளுடைய ஆழத்தையும் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு முன்கூட்டியே காவல்துறைக்கும் அரசுக்கும் உரிய முறையில் தகவல் சொல்லிவிட்டு விவசாயிகள் உடன் கலந்துரையாட உள்ளோம் என்ற அடிப்படையில் நாங்கள் பயணம் மேற்கொண்டோம்.
நாங்கள் விமான நிலையம் அமைப்பதற்கோ வளர்ச்சிக்கோ எதிரானவர்கள் இல்லை. ஆனால், விளைநிலங்களுக்கு அரசு நிர்ணயிக்கிற விலை மிகக் குறைவாக இருக்கிறது. அங்கே இருக்கிற குடியிருப்புகளின் மதிப்பு அதிகமாக இருக்கிறது. அந்த விவசாயிகள் அந்த கிராமத்தில் இருக்கிற நிலங்களை விட்டுவிட்டு பாகி நிலங்களை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்கிற ஒரு வாதத்தை முன்வைத்திருக்கிறார்கள்.
எனவே இதன் உண்மை நிலையைத் தெரிந்து, அரசுக்கு எங்கள் அமைப்பின் சார்பில், விவசாயிகளுடைய குரலாக சில கோரிக்கைகள் சென்றடைய வேண்டும் என்று அங்கே இருக்கிற இருக்கிற சில மக்களை சந்திக்க சென்றோம்.
நான் தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். அடக்குமுறையால், ஆனவத்தால் விவசாயிகளை ஒடுக்கிவிட்டு விளைநிலங்களை அபகரிக்க முடியாது. ஏற்கெனவே, 2019-இல் அதிமுக அரசு விவசாய நிலங்களை ஒப்புதல் இல்லாமல் அபகரிப்பதற்கு சட்டம் நிறைவேற்றியது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கில் வாதங்களை எப்படி வைத்தார்கள் என்று தெரியாது. ஆனால், நான் இப்போதும், முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுப்பது அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையப்படுத்தக் கூடாது. விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துகிறபோது சந்தை மதிப்பு என்கிற பெயரில் அடிமாட்டு விலைக்கு விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றக்கூடாது. அவர்களின் குடியிருப்புகளை உரிய மதிப்பு இல்லாமல் அப்புறப்படுத்த இயலாது. அவர்களுக்கு உரிய குடியிருப்பு வழங்க வேண்டும். விமான நிலையம் அமைகிறோம் என்கிற பெயரில், விலைநிலங்களை அபகரிப்பதற்கு காவல்துறையைப் பயன்படுத்தி அச்சுறுத்தல் செய்து, விவசாய சங்கங்களின் தலைவர்களையே அங்கே செல்ல விடாமல் தடுப்பது ஜனநாயகப் படுகொலை. நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக எப்படி இந்த போராட்டங்களை அணுகினீர்களோ அதே அணுகுமுறை இருக்க வேண்டும். உங்கள் உத்தரவு என்கிற பெயரில் காவல்துறை அத்துமீறி செயல்படுவதற்கு காவல்துறையை நீங்கள் வறுபுறுத்தக் கூடாது.
இதற்கு தமிழக முதலமைச்சர்தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இந்த மாதிரி வளர்ச்சித் திட்டங்களை அணுகுகிறபோது விவசாயிகளையும் பங்குதாரராகப் போட வேண்டும். விமான நிலையத்தைக் கட்டி அதானிக்கு, அம்பானிக்கு தாரை வார்க்கிறீர்கள். சாலையைப் போட்டு டோல் கேட் போட்டு வசூல் செய்வதற்கு பெரு முதலாளிகளுக்கு அனுமதி வழங்குகிறீர்கள். ஆனால், அதற்கு நிலத்தைக் கொடுத்துவிட்டு வாழ்வாதாரத்தை இழக்கிற விவசாயிகளுக்கு உரிய அளவில் லாபத்தில் அவர்களுக்கு ஆண்டுக்கு ஈவுத்தொகையை வழங்க மறுப்பது ஏன்? அவர்களை பங்குதாரர்களாகச் சேர்க்க மறுப்பது ஏன்? வளர்ச்சியை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், எங்கள் வாழ்வாதாரத்தைப் பறித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“