/indian-express-tamil/media/media_files/2025/05/20/LPluHvbwbuwB6Mov4Ve5.jpg)
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சென்னை மண்டல நிர்வாகிகள் அவசர கூட்டம் சென்னை பெசன்ட் நகர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மண்டல தலைவர் கே.செந்தில்வேலன் தலைமையற்றினார். பொதுச்செயலாளர் வி கே வி துரைசாமி முன்னிலை ஏற்றார். சென்னை மாநகர தலைவர் சங்கர் வரவேற்றார். செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லி ராம் நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலத் தலைவர் பிஆர்.பாண்டியன் கூட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே முதன் முதலில் 1972ல் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தை துவக்கி, அதனை தொடர்ந்து 1975இல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கொண்டு வந்தார்.
காவிரி டெல்டாவில் முதன் முதலில் கொள்முதல் துவங்கி பின்னர் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட கொள்முதல் அறிவிக்கப்பட்டது. இதனால் நெல் உற்பத்தி பெருகியது. விவசாயிகளுக்கு உரிய விலையும் சந்தை உத்திரவாதமும் கிடைத்தது. இந்நிலையில் நடப்பாண்டு முதல் தேசிய வேளாண் நுகர்வோர் கூட்டமைப்பு என்கிற மத்திய அரசின் பதிவு பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் முகவராக பதிவு பெற்ற தனியார் நிறுவனத்திற்கு தமிழகம் முழுமையிலும் கொள்முதல் செய்ய தமிழக அரசு சார்பில் அனுமதி கொடுக்கப்பட்டது.
தமிழ்நாடு நுகர்புற வாணிபக் கழகத்தின் அனைத்து கட்டமைப்புகளையும் பயன்படுத்தி தனிநபர் மூலம் பணம் பட்டுவாடா செய்வதற்கு 170 கோடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்பணமாக வழங்கி உள்ளது. கிட்டத்தட்ட கொள்முதல் செய்யப்பட்ட அரிசி இதுவரையிலும் அரசுக்கு வழங்கப்படவில்லை.
கொள்முதல் செய்த தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. செலவிட்ட தொகை குறித்தும் கணக்கு வரவு செலவு சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி தமிழ்நாடு நுகர்பொருள் மேலாண்மை இயக்குனர் தனியார் முகவருக்கான கொள்முதல் அனுமதியை ரத்து செய்துவிட்டார்.
இதனால் செங்கல்பட்டு ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பயிரிடப்பட்ட நெல் ஒட்டுமொத்த கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 500 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டி உள்ளதாக தெரிய வருகிறது.
இதன் மூலம் மிகப்பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது. தனியாருக்கு கொள்முதல் அனுமதிக்க கூடாது கார்ப்பரேட் கொள்கையை பின்பற்ற கூடாது என்று தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராக போராடி வந்தோம். ஏற்க மறுத்து சுயநலத்திற்காக தனிநபருக்கு ஆதரவாக அனுமதி வழங்கிய உணவுத்துறை அமைச்சர் அ.சக்கரபாணி ஊழல் முறைகேட்டிற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். மறுக்கும் பட்சத்தில் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு உடனடியாக உரிய தொகையை வழங்கி விவசாயிகளை பாதுகாக்க முதலமைச்ச பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வரும் மே 27ஆம் தேதி சென்னை கோயம்பேடு அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.