தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தாண்டு பொங்கலுக்கு ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவையும் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் இவற்றுடன் சேர்த்து கரும்பையும் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 1,500 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் பன்னீர் கரும்பை சாகுபடி செய்துள்ளனர்.
இந்தக் கரும்பு, பொங்கல் பண்டிகையையொட்டி அறுவடை செய்யப்படும். முன்னதாக, இந்தக் கரும்பை வியாபாரிகள் விவசாயிகளிடம் நேரிடையாக கரும்புக்கு பணம் கொடுத்து விடுவார்கள்.
இதனால் பன்னீர் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் தொகுப்பில் பன்னீர் கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது.
இதேபோல் திமுக ஆட்சி வந்ததும் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் பன்னீர் கரும்பு வழங்கப்படவில்லை .
இதனால் பன்னீர் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வேதனை தெரிவித்த காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ. இளங்கீரன் தனது அறிக்கையில், ” பொங்கல் பரிசுத்தொகை அறிவித்த தமிழக அரசுக்கு விவசாயிகள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக விவசாயிகள் விளைவித்த பொங்கல் கரும்பை அரசு சார்பில் கொள்முதல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கரும்பு வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு அதுபோன்று கரும்பு வழங்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பெருமளவில் பொங்கல் கரும்பை உற்பத்தி செய்துள்ளார்கள்.
தற்போது அப்படி கொள்முதல் செய்யப்படாது என்ற நிலை உருவாகி இருப்பதால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் ஏமாற்றமும், உற்பத்தி செய்த கரும்பை என்ன செய்வது என்ற கவலையோடும் இருக்கிறார்கள்.
ஆகவே, எப்பொழுதும் போல் பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்து அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் உள்ள 2.19 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு வழங்கினால் அவர்களும் சந்தோஷப்படுவார்கள், விவசாயிகளுக்கும் பயனாக இருக்கும்.
பொங்கல் தொகுப்போடு கரும்பையும் சேர்த்து வழங்காவிட்டால், இந்த தைப் பொங்கல் விவசாயிகளுக்கு கசக்கும் பொங்கலாகவே அமைந்து விடும்.
அதனால் பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்த்து அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக முதல்வரை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.
செய்தியளாளர் க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/