திருவண்ணாமலை பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிக்கு செய்யாறு பகுதியில் உள்ள 99% விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர் என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு சட்டப் பேரவையில் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு எதிராகப் போராடிய 7 விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து, சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கப் பணிக்காக விளை நிலங்களை கையகப்படுத்த, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நியாயமான முறையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது என்று கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் எ.வ வேலு, அ.தி.மு.க ஆட்சியில் தான், அங்கு சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த, அரசு உத்தரவு போட்டது. நீங்கள் விட்டுச் சென்ற பணியை நாங்கள் தொடர்கிறோம். படித்த இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அரசு அக்கறையுடன் செயல்பட்டது. 99% விவசாயிகள் தங்கள் நிலங்களை வழங்க இதற்கு ஆதரவு தெரிவித்தனர் என்றார்.
தொடர்ந்து, 9 கிராமங்களில் நிலம் எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், 7 கிராம மக்கள் நிலம் தர முன்வந்துள்ளனர். சிலர் துாண்டுதலில், இரண்டு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளை வஞ்சிக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று கூறினார்.
இதையடுத்து பேசிய இ.பி.எஸ், காவிரியில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாததால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“