/indian-express-tamil/media/media_files/2025/11/03/pr-pandian-farmers-2-2025-11-03-17-43-41.jpg)
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபின், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
“பெரியகுடி ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு மூடப்பட்டது. தென்னிந்திய பசுமை தீர்ப்பாய உத்தரவு அடிப்படையில் ஓ.என்.ஜி.சி கனரக இயந்திரங்களை உடன் வெளியேற்ற வேண்டும்; 27.10.2025 கண்காணிப்புக் குழு கூட்டத்தில் சட்ட விரோதமாக தன் விருப்பத்திற்கு சுற்றுச்சூழல் துறை செயற்பொறியாளர் மறு ஆய்வு செய்ய தெரிவித்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்; அவசரமாக மீண்டும் கண்காணிப்புக் குழு கூட்டத்தை ஆட்சியர் தலைமையில் நடத்தி 27.10.2025 கூட்டத்தின் சட்டவிரோத முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு திங்கள்கிழமை அளித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தபின், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் திருவாரூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவேரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அன்று முதல் ஒ.என்.ஜி.சி கனரக வாகனங்கள் டெல்டாவை விட்டு வெளியேற்றப்பட்டது.
தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் அங்கொன்றும் இங்கொன்றுமாக மூடப்பட்ட கிணறுகளை மறுசீரமைப்பதற்கான முயற்சியில் சட்ட விரோதமாக ஈடுபடுகிறார்கள். குறிப்பாக மன்னார்குடி அருகே பெரியகுடி ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறு 2013-ல் வெடித்து தீ பற்றி எரிந்தது. ஆசியா கண்டத்திலேயே எங்கும் இல்லாத அளவில் அடர்த்தியான ஹைட்ரோ கார்பன் எரிவாய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க கூடாது. உடன் பெரியகுடி ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மத்திய, மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுத்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு கிணறுகளை உடனடியாக மூடி விடுவோம். தொடர்ந்து காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் அறிவிப்போம் என நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தனர். அதனை ஏற்று, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2023-ல் மீண்டும் பெரியகுடி கிணறை திறப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்ட போது சுதந்திர தின விழா அன்று போராட்டத்தில் ஈடுபட முயன்றோம். அதனை அறிந்த தமிழக அரசு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. உடனடியாக பெரியகுடியில் உள்ள 2 கிணறுகளையும் மூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில்
கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டது.
அதன்படி, பிடி 2 கிணறு மூடப்பட்டு தற்போது வாகனங்களை வெளியேற்ற வேண்டும். இந் நிலையில் பிடி 1 என்கிற கிணறு ஏற்கனவே தகுதியற்றது என மூடப்பட்டுள்ளது. தற்போது அதனை திறப்பதற்கு தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை ஆதரவில் முயற்சிகளை ஓ.என்.ஜி.சி மேற்க்கொண்டு வருவது சட்ட விரோதமானது.
கிராமங்களில் வறுமையில் உள்ள மக்களிடம் இலவச வீடு கட்டித் தருவதாகவும், ஆடுமாடுகள் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை காட்டி கிணறை செயல்படுத்த முயற்சி செய்கிறது.
இது குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடத்தில் புகார் மனு அளித்தோம். சுற்றுசூழல் துறை செயற்பொறியாளரை வரவழைத்து விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து சட்ட விதிமுறைகள், நீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஏற்கனவே பேச்சு வர்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் பிடி 1 கிணற்றை பராமறிப்பதற்கு அனுமதிக்க முடியாது. பிடி2 கிணறு அடைக்கும் பணி முடிந்துள்ளது. அடைப்பு பணி தரம் அழுத்தம் உறுதி செய்வதற்கான இயந்திரங்களை தவிர மற்ற அனைத்து கணரக இயந்திரங்களையும் வெளியேற்ற சுற்றுசூழல் துறைக்கு உத்திரவிட்டுள்ளார்.
குறிப்பாக தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் இருக்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து தடை விதித்துள்ள நிலையில், ராமநாதபுரத்தில் தமிழக அரசுக்கு தெரியாமலேயே தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஹைட்ரோகார்பன் திட்டத்திற் அனுமதி அளித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக கட்டுமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றம் கண்டித்து உள்ளது.
காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலத்தில் சுற்றுச்சூழல் துறை துணையோடு மூடப்பட்ட கிணறுகளை மறுசீரமைக்க முயற்சி செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு அத்துறையினுடைய செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ் மறைமுகமாக துணைபோகிறாரா? என்று அஞ்சத் தோன்றுகிறது. எனவே, அவர் மீது உரிய துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து சட்ட விரோதமாக பேரழிவுத் திட்டங்களுக்கு தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்படுமேயானால் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளும் ஒன்று கூடி தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை தீவிர படுத்துவோம்” என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.
கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இராவணன், தலைவர் எஸ் வி கே சேகர்.குடவாசல் நகர செயலாளர் சுரேஷ் பாபு உயர்மட்ட குழு உறுப்பினர்கள் குடவாசல் செல்வராஜ், கண்ணை,பெரியகுடி கமலக்கண்ணன், சேந்தமங்கலம் சங்கர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் உடன் இருந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us