அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்செகாவத் சந்திப்பு சட்டவிரோதமானது என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங்செகாவத் சந்திப்பு சட்டவிரோதமானது. அவசரமாக ஆணையத்தை கூட்டி ஜூன் ஜூலை மாதத்திற்கான 43 டிஎம்சி தண்ணீரை பெற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.
தமிழக முதலமைச்சர் வேண்டுகோளை ஏற்று காவிரி டெல்டாவில் 5 லட்சம் ஏக்கரில் குருவை சாகுபடி மேற்கொண்டனர். சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கரில் நிலத்தடி நீரை பயன்படுத்தி சாகுபடி பணிகள் தொடர்கின்றது. 3.50 லட்சம் ஏக்கரில் விதைக்கப்பட்ட நெல்மணிகள் பல இடங்களில் முளைப்பதற்கு கூட தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. சில இடங்களில் தண்ணீர் பாய்ந்து உரம் இடுவதற்கு வழியில்லாமல் கருக தொடங்கி இருக்கிறது. இழப்பிற்கு முழு பொறுப்பேற்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.
இந்நிலையில் தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்திற்கு மேலான அளவில் தண்ணீர் உள்ள நிலையில் நமக்கு ஜூன் ஜூலை மாதத்திற்கு தர வேண்டிய 43 டிஎம்சி தண்ணீரை தர கர்நாடக மறுத்துவருகிறது. காவிரி மேலாண்மை ஆணையம் ஜூன் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீர் 9.1 டிஎம்சி உத்தரவிட்டும் தராமல் கர்நாடகம் ஏமாற்றி விட்டது.பெற்று தர வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில் அழியும் பயிரை காப்பாற்றுவதற்கு தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துறைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்திப்பது திட்டமிட்ட நாடகமாகும். இச்சந்திப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கும் முரணாக உள்ளது.
தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆணையத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து கர்நாடகாவிடம் உடன் தண்ணீரை பெற்று தர வேண்டும். அவ்வாறு செயல்பட மத்திய அரசும் கர்நாடக அரசும் மறுக்குமேயானால் தமிழ்நாடு அரசும், ஆணையம் மூலம அவசர வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து தீர்வு காண முன்வர வேண்டுமே தவிர, மத்திய அமைச்சரை சந்திப்பதால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எந்த பயனும் அளிக்காது.
இன்றைய சந்திப்பு மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் பெற்ற உரிமையை மீண்டும் மத்திய அரசிடம் பறி கொடுப்பது போல் மத்திய அமைச்சரை சந்தித்து ஆணையத்திற்கு வலியுறுத்த கேட்டு கடிதம் கொடுப்பது அமைந்துள்ளது. இது முற்றிலும் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு முரணாக உள்ளது.இது தமிழ்நாட்டிற்கு பாதகத்தை உருவாக்கும்.
காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்று தருவதற்கு மத்திய அரசாங்கங்கள் மாறி மாறி அரசியல் செய்ததால்தான் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அமைத்து உள்ளதை முதலமைச்சருக்கு நினைவு படுத்த விரும்புகிறேன். எனவே மீண்டும் மீண்டும் மத்திய அரசின் தலையில் சுமத்தி விட்டு காவிரி டெல்டா விவசாயிகளை பரிதவிக்க விடுவதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
இது குறித்து அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை கூட்டி விரைந்து தண்ணீரைப் பெற்று கருகும் பயிரை காப்பாற்ற தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தில் டெல்டா விவசாயிகள் களமிறங்குவோம் என எச்சரிக்கிறேன்.
மூன்றாவதாக ஆண்டாக தொடர்ந்து குருவைக்கான காப்பீடு திட்டத்தை தமிழக அரசு கைவிட்டதால் ஒட்டுமொத்த விவசாயிகள் தற்போதைய சூழலில் இழப்பீடு பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கான முழு பொறுப்பை தமிழ்நாடு அரசு ஏற்று உரிய பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"