கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக தலைமையிலான தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், '5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகை கடன்கள் தள்ளுப்படி செய்யப்படும்,' என தெரிவிக்கப்பட்டது.
அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி
இதை எதிர்த்து, 'தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம்' தலைவர் அய்யாக்கண்னு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம்,விவசாயிகளை சிறு குறு என்று பாகுப்படுத்தாமல் அனைத்து விவசாயிகளுக்கும் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,’ என அரசுக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'இந்த விவகாரத்தில் தமிழக அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவு வேளாண் வங்கிகளில் பெற்ற பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற கிளையின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என கடந்த 12ஆம் தேதி தெரிவித்தது.
இந்நிலையில் நேற்று, இந்த வழக்கு நீதிபதிகள் டி ஒய் சந்திரசூட், போபண்ணா அமர்வில் இறுதி தீர்ப்புக்காக வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
வரையறுத்து கடன் தள்ளுபடி செய்தது சரியே
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதன் நோக்கம், சீரற்ற வானிலை, குறைந்த விளைச்சல் மற்றும் சந்தை நிலவரங்களால் விலை வீழ்ச்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை மேம்படுத்துவதே ஆகும். மற்ற விவசாயிகளுடன் ஒப்பிடும்போது சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதிகமாகும். சிறு, குறு விவசாயிகள் என வரையறுத்து, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ளவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்தது சரியே" என்றனர்.
அப்போது தமிழக அரசு தரப்பில் பேசுகையில், குறு மற்றும் சிறு விவசாயிகளின் நுகர்வுச் செலவு வருவாயை விட கணிசமான அளவு அதிகமாக இருப்பதாகவும், பற்றாக்குறையை கடன்கள் மூலம் சமாளிக்கின்றனர். பொருளாதார மற்றும் சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக விவசாயிகளின் நலனை ஒரு வகுப்பாக மேம்படுத்துவதன் நோக்கமாகும் என வாதிப்பட்டது.
சிறு, குறு விவசாயிகளுக்கு வருவாய் பற்றாக்குறை
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், "16,94,145 சிறு மற்றும் குறு விவசாயிகள் விவசாயக் கடன்களைப் பெற்றுள்ளனர், 'மற்ற' வகையைச் சேர்ந்த 3,01,926 விவசாயிகளுடன் ஒப்பிடுகையில், சிறு, குறு விவசாயிகளுக்கு வருவாய் பற்றாக்குறை உள்ளது.
0.01 ஹெக்டேருக்குக் குறைவான நிலங்களைக் கொண்ட குடும்பங்கள் விவசாயக் கடன்களில் 93.1 சதவீதத்தை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகின்றன என்ற தரவை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், 10 ஹெக்டேர் நிலம் வைத்திருக்கும் ஒரு குடும்பம் விவசாயக் கடனில் 17.1 சதவீதத்தை மட்டுமே விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறது என தெரிவித்தனர்.
அரசுக்கு முழு அதிகாரம்
எனவே, யார் யாருக்கு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வரையறுக்க அரசுக்கு முழு அதிகாரம் உண்டு. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளித்தனர்.
மேலும், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் கடன் தள்ளுபடி செய்வதில் எந்த தவறும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சிறு விவசாயி என்றால் 2.5 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயி என்றும், குறு விவசாயி என்றால் 2.5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.