விவசாயிகளிடம் நேரடி கொள்முதல்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்
ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை கொள்முதல் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், காய்கறி, பழங்கள் போன்றவற்றை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து, விளைபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், விவசாயிகளின் நலனுக்காக அரசு அறிவித்துள்ள சலுகைகள் குறித்து விரிவாக விளம்பரம் செய்யவும், விளைபொருள்களை விவசாயிகள் விற்பனை செய்ய வகை செய்யும்படி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைக் கூறி, விபரங்கள் மற்றும் வட்டார அளவில் உள்ள வேளாண்மை துறை அதிகாரிகள் தொலைபேசி எண்களை வெளியிடவும் அதனை உரிய முறையில் விளம்பர படுத்தவும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்யநாரயணன், நிர்மல்குமார் அமர்வு முன் வீடியோ கான்பிரன்ஸில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனேவே பிறப்பித்த உத்தரவின்படி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாரயணனிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
அரசின் இந்த பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், இந்த வழக்கில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"