Tiruchirappalli | திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தலைமையில் இன்று (பிப்.19,2024) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகள் முதியோர் உதவித் தொகை என பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.
இதில், பேருவளை வாய்க்கால் பாசன சங்கத்தினர் மாநில துணைத் தலைவர் தியாகராஜன் தலைமையில் பருவ மழையில் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி மனு அளித்தனர்.
முன்னதாக பேரணியாக வந்த விவசாயிகள், திருச்சி மாவட்டத்தில் நடப்பு பருவத்தில் சோளம் பயிரிட்டு விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு அரசு வழங்கிடவும், தமிழக விவசாயிகளை வாழ வைக்காமல், மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்து ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கும் திமுக அரசை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
அத்துடன், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி, தமாக விவசாயம் பிரிவு சார்பில் விவசாயிகள் ஏராளமானோர் பாமாயில் எண்ணெயை சாலையில் கொட்டியும், பாதிக்கப்பட்ட சோள பயிர்களுடன் பேரணியாக வந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“