மத்திய அரசின் பட்ஜெட் குறிப்பில் தமிழ்நாடு பெயர் இடம்பெறாததற்கு எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக போராட்டம் நடைபெற்றது.
மத்தியில் 3-வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, கடந்த வாரம் பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில், தமிழ்நாடு பெயர் இடம்பெறவில்லை. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்கட்சியினர் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற சென்னை மாநகராட்சி கூட்டத்தில், திமுக. உறுப்பினர்கள் பட்ஜெட் நகலை கிழித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெறவில்லை என்பதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், சமீபத்தில் நடைபெற்ற முதலமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இடம்பெறாதது குறித்து எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், மத்திய அரசுக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக சார்பாக பட்ஜெட் உரையில் தமிழ்நாடு பெயர் இடம்பெறாதது குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட துணை அமைப்பாளர் இரா.கஜேந்திரன் தலைமையில், வடக்கனந்தல், மாதவச்சேரி ,மாத்தூர், எடுத்தவநத்தம், பரிகம், உள்ளிட்ட கிராமங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் "தமிழகத்தை புறக்கணித்தால் பட்ஜெட்டை தீயிலிட்டு கொளுத்துவோம்" என்று கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நகர செயலாளர் பி. கிருஷ்ணன் விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட துணை அமைப்பாளர் கே.கபில்தேவ், ஏ.ஐ.ஒய்.எஃப் (AIYF) ஒன்றிய செயலாளர் சிவராமன், கலை இலக்கிய பெருமன்றம் ராஜா, தமிழ்நாடு விவசாயின் சங்கம் சார்ந்த சிவாஜி, வீரா, கண்ணன், ரஞ்சிதா, திலகவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“