/indian-express-tamil/media/media_files/2025/06/11/gaaCzBIu2z1hnGk5Exo4.jpg)
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜூன் 11) தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகூர் அருகே உத்தமசோழபுரத்தில் கட்டப்பட்டு வரும் கதவணைத் திட்டம், சுமார் 10,000 ஏக்கர் விளைநிலங்களை பாலைவனமாக்கி, 32 கிராமங்களின் நிலத்தடி நீரை உப்பாக்கும் என விவசாயிகள் குற்றம் சாட்டினர். இந்த திட்டத்தை பூதங்குடிக்கு மாற்ற வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் ஆகாஷிற்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விவசாயிகள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த திட்டத்தால் ஏற்படும் பேரழிவை அரசுக்கு எடுத்துரைத்து, கதவணை பணியை பூதங்குடிக்கு மாற்ற உதவ வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால், மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை சந்திக்க மறுத்து, அலுவலகத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியரின் இந்த செயலால் அதிருப்தி அடைந்த விவசாயிகள், அவருக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர், மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக விவசாயிகளை சந்தித்து சமாதானப்படுத்தினார். விவசாயிகளின் கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அவர் உறுதியளித்ததை அடுத்து, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர். பாண்டியன், "காவிரி டெல்டா மாவட்டங்களில் கடல் மட்டம் உயர்ந்ததால், ஆறுகள் வழியே கடல் நீர் 40 கிலோமீட்டர் வரையிலும் குடியிருப்பு மற்றும் நிலப்பகுதிகளுக்குள் புகுந்து, நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இதைத் தடுப்பதற்காக, 2016 முதல் தமிழக அரசு ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் ரூ. 960 கோடியில் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், நாகப்பட்டினம் அருகே நாகூர் கடற்கரையில் இருந்து ஏழரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உத்தமசோழபுரத்தில் ரூ. 50 கோடி செலவில் நீர்ப்பாசனத் துறை மூலம் கதவணை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இந்தப் பணி முடிந்தால், ஏழரை கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் நீர் உட்புகுந்து, இரு கரையோரம் உள்ள 32 கிராமங்களின் நிலத்தடி நீர் பறிபோய், சுமார் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
தி.மு.க மாவட்ட செயலாளர் கவுதமனின் ஆதரவு பெற்ற இறால் பண்ணையாளர்களின் நலனுக்காகவே கடல் நீரை உள்ளே கொண்டு வந்து பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே, விவசாயிகள் நலன் கருதி, அ.தி.மு.க அரசு ஏற்கனவே எடுத்த நடவடிக்கைகளை பின்பற்றி, கடல் நீர் உட்புகுவதை தடுக்கும் வகையில், பூதங்குடி அருகே கதவணையை மாற்றி அமைக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி, 32 கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சிகளை சார்ந்த விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், உத்தமசோழபுரம் கிராமத்தில் ஏராளமான காவல்துறையினரைக் குவித்து, ஒரு மாத காலமாக முள்வேலி முற்றத்திற்குள் அடைத்து வைத்து, இலங்கை அரசு சித்திரவதை செய்வது போல விவசாயிகளை அடைத்து வைத்து அடக்குமுறையை ஏவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் விவசாயிகளை சந்தித்து கோரிக்கையை ஏற்று அரசுக்கு அனுப்பி தீர்வு காண்பதற்கு மறுத்துவிட்டார். விவசாயிகளை சந்திக்க மறுத்து அவர் வெளியேறிவிட்டார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளுங்கட்சியின் தூண்டுதலின் பேரில் ஒட்டுமொத்த மக்களையும் போராட்டக் களத்திற்கு மாவட்ட ஆட்சியர் தள்ளி உள்ளார். கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் ஒட்டுமொத்தமாக காவிரி டெல்டாவில் பல கிராமங்கள் அழிவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் நேரில் தலையிட்டு இதற்கு தீர்வு காண வேண்டும். அதுவரையிலும் கட்டுமானப் பணியை நிறுத்தி வைத்து, மாற்று இடத்தை ஆய்வு செய்து, அதற்குத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து கட்டுமானத்தை மேற்கொண்டு, கடல் நீர் உட்புகுவதை தடுத்து நிறுத்தி விளைநிலங்களையும் விவசாயிகளையும் பாதுகாப்பதோடு, நிலத்தடி நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
க. சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.