எலும்புக்கூடு-எலிகளுடன் போராட்டம் நடத்தும் விவசாயிகள்: திருச்சியில் பரபரப்பு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 14 - நாளாக மண்டை ஓடுகள், எலும்பு துண்டுகளை வைத்தும், எலிகளை வாயில் கவ்வியும் நூதன முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisment
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியதாவது; விவசாயிகளுக்காக தொடர்ந்து போராடி, வாழ்வாதாரம் இழந்து இறந்துபோன விவசாயிகளின் மண்டை ஓடுகளை வைத்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது என்று கூறுகிறார்கள், ஆனால் விவசாயிகளை இன்று வரை அடிமையாக தான் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு உகந்த விலை இல்லை, கரும்புக்கு உகந்த விலை இல்லை, விவசாயிகள் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கிறார்கள். ஆனால் அரசு இதை கண்டு கொள்ளாமல் மெத்தன போக்கில் செயல்படுகிறது. அதேபோன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கியும் இதுவரை கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை, விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். வாழ்வாதாரம் இழந்து, அத்தியாவசிய பொருளை வாங்கக்கூட வழியில்லாமல் விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆகையால் விவசாயிகள் உணவுக்கு பதிலாக எலியை உன்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது என்றார்.
மேலும், அவர் தெரிவிக்கையில், இதுவரை அரசு அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆகையால், எங்களின் இந்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும். விவசாயிகளின் நலன்களில் எப்படி அதிகாரிகள் அலட்சிய போக்கில் இருக்கிறார்களோ, அதேப்போன்று தான் எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றுவதில் அலட்சியப் போக்கில் செயல்படுகிறார்கள். உடனடியாக அரசு அதிகாரிகள் எங்களுடைய கோரிக்கையை குறித்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், இல்லை என்றால் எங்களுடைய போராட்டம் இன்னும் தீவிரமடையும் என்றார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“