பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையையும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (பிப்.7) 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று காலை திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவிக்கையில்; தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஆய்வு செய்ய அமைச்சர்களை அனுப்பியதுடன், விரைவாக நிவாரணம் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால், அரசு அறிவித்துள்ள நிவாரணம் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம்(ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம்) என்பது போதாது. ஒரு ஏக்கருக்கான சாகுபடி செலவு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் ஆகிறது. எனவே, தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.8 ஆயிரத்துடன், முழுமையான காப்பீட்டுத் தொகையையும் சேர்த்து ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
அதேபோல, உளுந்து பயிருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையையும் உயர்த்தி வழங்க வேண்டும். மேலும், வேளாண் பொறியியல் துறைக்குச் சொந்தமான நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகையில் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட்டுள்ளது போல, தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையிலும் 50 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் உள்ளிட்ட 10 இடங்களில் பிப்.7(இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கோம் என்றார்.
செய்தி: க. சண்முகவடிவேல்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"