திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப்குமார் தலைமையில் இன்று (நவ.30) நடைபெற்றது. திருச்சி மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் குறைகளை கோரிக்கைகளாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனுவாக அளித்தனர். கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்டிருப்பதாகவும், அதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்து காவல்துறையினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், "காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பது கிடையாது.
இதனால் காவேரி டெல்டா விவசாயிகளை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும். அல்லது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஒரு லட்சம் கோடி நஷ்ட ஈடு வாங்கி காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்.
கடந்த 2021-ம் ஆண்டு குழுமணியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிக்கு நியாயம் கேட்டு 24 விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாநிலத் தலைவராகிய என் மீது 6 வழக்குகளும், என் சங்கத்தை சார்ந்த விவசாயிகள் மீது பல்வேறு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் போட்டதை போல என் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடுவதற்காக காவல்துறையினர் முயற்சி செய்து வருகின்றனர்.
இதற்கு காரணமான திருச்சி மாவட்ட துணை கமிஷனர் அன்பு மற்றும் காவல்துறையினரை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தர்ணா போராட்டத்தில் விவசாயிகளாகிய நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்" என்றார். விவசாயிகள் குறை தீர்ப்பு நாளில் திடீரென விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் பரபரப்பு நிலவுகிறது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“