க.சண்முகவடிவேல்
Delta Farmers: திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களில், சமீபத்தில் பருவம்மாறி பெய்த கனமழையால் விளைநிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட பயிர்களை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன்பின்னர் விவசாயிகளிடம் பாசன நீர்தேவை குறித்து கேட்டறிந்தவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியது பின்வருமாறு:- காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம்மாறி பெய்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் கடும் உழைப்பில் நெல் சாகுபடி செய்து உள்ளனர். இன்று வரையிலும் சுமார் 50 சதவீத விளை நிலப் பகுதிகளில் கதிர் வந்து அறுவடைக்கு தயாராகும் நிலையில் உள்ளது. 50 சதவீத நிலப்பரப்பில் பயிராகவும், கதிர் வரும் நிலையிலும் உள்ளது.
இதனை பாதுகாக்க வேண்டுமானால் பிப்ரவரி இறுதி வரையிலும் தண்ணீர் தேவை உள்ளது. தேவையை கருத்தில் கொண்டு பிப்ரவரி 15 வரை மேட்டூர் அணையை திறந்து பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க அனுமதிக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் பயிர்கள் 90% அளவிற்கு நல்ல விளைச்சலை தரக்கூடிய நிலையில் உள்ளது. ஒரு சில கிராமங்களில் ஆங்காங்கு பெய்த சீரற்ற பெரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சாய்ந்தும், நோய் சார்ந்த இயற்கை இடர்பாடுகளால் அறுவடை செய்ய இயலாத நிலையிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை முழுமையாக வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை இணைந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு பேரிடர் நிதியிலிருந்து உரிய இழப்பீடு வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுடைய பட்டியலை வெளிப்படையாக கிராமங்கள் தோறும் வெளியிட்டு பாதிப்பிற்கு ஏற்ப நிவாரண நடவடிக்கை தொடங்கிட வேண்டும்.
பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதே தவிர, பல்வேறு முரண்பாடுகளால் கொள்முதல் துவங்கப்படாததால் அறுவடை துவங்க முடியவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு அறுவடைக்கு தயாராக உள்ள கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், ஒன்றிய செயலாளர் மோகன், தலைவர் நாகராஜன், முன்னணி நிர்வாகிகள் நடராஜன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“