/indian-express-tamil/media/media_files/2025/06/17/gtgeftwGdPcWHFi9yEDv.jpg)
தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் தனியார் இடைத்தரகரை நியமித்து கொள்முதல் செய்த நெல்லுக்கான முழுத்தொகையும் மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் விவசாயிகளுக்கு விடுவிக்கப்படாததைக் கண்டித்து, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இன்று சென்னை கோட்டையை முற்றுகையிட விவசாயிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் எழும்பூரில் ஒன்றுகூடத் தொடங்கினர்.
இது குறித்து அறிந்த காவல்துறை அதிகாரிகள், தமிழக அரசின் உணவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சத்ய பிரதா சாகுவின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் (பொறுப்பு) முருகேஷ் ஐ.ஏ.எஸ். தலைமையில் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த மே 26 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்படி, 17,500 விவசாயிகளுக்கு பணம் பட்டுவாடா செய்ய வேண்டியிருந்தது. ஆனால், தற்போது வரை 10,500 விவசாயிகளுக்கு மட்டுமே பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 7,000 விவசாயிகளுக்கு வரும் ஜூலை 2ஆம் தேதிக்குள் பணம் விடுவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவினை, டிஎன்சிஎஸ்சி பொது மேலாளர் (வணிகம்) நேரடியாக விவசாயிகளை போராட்டக் களத்தில் சந்தித்து அறிவித்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறுகையில், "தமிழக அரசு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்து வந்தது. நடப்பாண்டு அதனை கைவிட்டு, எந்தத் தகுதியோ, அடிப்படை கட்டமைப்போ, பணப் பரிவர்த்தனைக்கான வங்கி தகுதியும் இல்லாத அமிருதீன் ஷேக் தாவூத் என்ற ஒரு தனியாரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நெல் கொள்முதலுக்கு அனுமதித்துள்ளது.
கணக்கு வழக்குகள் சரிவர பின்பற்றப்படவில்லை. நெல்லுக்கான அரிசி கொடுக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். இதற்காக இரண்டு கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே மே 26ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 15 தினங்களுக்குள் பணம் முழுமையும் கொடுத்து முடித்திருக்க வேண்டும். ஆனால், ஒப்பந்தம் மேற்கொண்ட மேலாண்மை இயக்குநர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ். கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார். அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாக பணம் வழங்கப்படவில்லை.
தனியார் கொள்முதலுக்கு அனுமதிக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். இது குறித்து முதலமைச்சரோ, துறை அமைச்சரோ உரிய விளக்கம் அளிக்க முன்வரவில்லை. விவசாயிகள் பலர் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து முழுமையாக அறிந்த முதலமைச்சர் விவசாயிகளுக்கு ஆறுதல் கூட கூற முன்வராதது வஞ்சிக்கும் செயலாகும்.
'டெல்டா காரன்' என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முதலமைச்சர், விவசாயிகளுக்கு விரோதமான செயல்களையே தனது திட்டங்களாக செயல்படுத்தி வருவது வேதனை அளிக்கிறது. தனியாரைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகளைப் பழிவாங்கிறார்.
எனவே, இன்று எடுக்கப்பட்ட ஒப்பந்தப்படி ஜூலை 2ஆம் தேதிக்குள் பணம் கொடுக்கப்பட வேண்டும். மறுக்கும் பட்சத்தில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மாநிலம் முழுவதிலும் கருப்புக் கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். வீடுகளில் திமுக அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைப் பதிவு செய்வோம். விவசாயிகளுடைய வாழ்வுரிமைக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம். இது குறித்து விரைவில் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்வோம்" என்று தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.