சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் படித்துவந்த கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீஃப் நவம்பர் 9 ஆம் தேதி ஐஐடி வளாகத்தில் உள்ள விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். மாணவி பாத்திமா ஐஐடியில் பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா, மிலிந்த் பிரம்மம் ஆகியோரின் மத ரீதியான துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டதாக அவருடைய செல்போனில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது.
சென்னை ஐஐடியில் நிலவும் சாதி, மத ரீதியான பாகுபாடுகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதை முடிவு கட்டவும் மாணவி பாத்திமாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாத்திமாவின் தற்கொலை குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஐஐடிக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இந்த வழக்கை சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசாரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீஸார் குழு மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் கேரளாவில் இருந்து சென்னை வந்து தமிழக முதல்வர், டிஜிபியை சந்தித்து தனது மகள் தற்கொலை விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என்று புகார் அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தனது மகளின் தற்கொலையில் மர்மம் உள்ளது என்றும் இதற்கு பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். தனது மகளின் செல்போன், மடிகணினியை ஆய்வுக்குட்படுத்தினால் ஆதாரம் இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் சென்னை பாத்திமாவின் தந்தை, ஐஐடி நிர்வாகம், மூன்று பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தியது. பாத்திமா தற்கொலை விவகாரத்தில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு இந்திய தேசிய மாணவர் சங்கம், சென்னை ஐஐடி மாணவி பாத்திமாவின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை மாற்றக் கொரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில், மனுதாரர் மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை ஏற்கெனவே மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சென்னை ஐஐடியில் ஏப்ரல் 2018 முதல் நவம்பர் 2019 வரை சென்னை ஐஐடி கல்லூரி வளாகத்தில் மொத்தம் 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
ஐஐடி வளாகத்தில் இப்படி பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டபோதும் அந்த நிறுவனம் எந்தவொரு பயனுள்ள நிவாரண நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். அதனால், மாணவியின் தற்கொலை விவகாரம் ஒரு மர்மமாக மாறியுள்ளதால், மாணவர் சங்கத்துக்கு மாநில காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. அதனால், மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டியது அவசியம் என்று மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையினரால் நியமிக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழு முறையான விசாரணையை மேற்கொண்டிருந்தாலும், இந்த விவகாரம் பொதுமக்களிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளதால் அதில் நம்பகத்தன்மை இல்லை. அதனால், சிபிஐ போன்ற ஒரு சுயாதீன நிறுவனம் இந்த விஷயத்தை விசாரிக்கும் வரை, உண்மை ஒருபோதும் வெளிவராது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.