சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா, மிலிந்த் பிரம்மம் ஆகிய மூன்று பேரிடம் மத்தியக்குற்றப் பிரிவு போலீஸார் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினர்.
சென்னை ஐஐடியில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் படித்துவந்த கேரள மாநிலம் கொள்ளத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா நவம்பர் 9 ஆம் ஐஐடி வளாகத்தில் உள்ள சரயு விடுதியில் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தார்.
மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் சென்னை ஐஐடியில் பேராசிரியர்கள் அளித்த மத ரீதியான துன்புறுத்தலே காரணம் என்று கூறப்பட்டது. ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன் ஹேமச்சந்திர காரா, மிளிந்த் பிரம்மம் 3 பேர்தான் தனது தற்கொலைக்கு காரணம் என்று பாத்திமா குறிப்பிட்டதாக அவருடைய குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இதனால், சென்னை ஐஐடியில் நிலவும் சாதி, மத ரீதியான பாகுபாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் மாணவி பாத்திமாவின் மரணத்துக்கு நீதி கேட்டும் பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் சென்னை ஐஐடிக்கு சென்று 3 பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தினார். இதையடுத்து, அவர் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கை நவம்பர் 11 ஆம் தேதிக்கு மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றி உத்தரவிட்டார். முன்னதாக, பாத்திமாவின் அறையில் இருந்த மடிகணினி, செல்போன் ஆகியவை போலீசாரால் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை வந்த பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃப் தமிழக முதல்வரையும் டிஜிபியையும் சந்தித்து புகார் அளித்தார். தனது மகளின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும் பாத்திமாவின் தற்கொலைக்கு காரணம் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்றும் கூறினார். பாத்திமாவின் செல்போனை வெளிப்படையாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையின் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாத்திமா தொடர்பாக மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீஃபிடம் விசாரணை நடத்தினர்.
நவம்பர் 19 ஆம் தேதி பாத்திமாவின் தற்கொலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திர காரா, மிலிந்த் பத்மநாபன் ஆகிய மூன்றுபேருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினர்.
அதே நேரத்தில், மத்தியக்குற்றப்பிரிவு போலீஸின் சிறப்புக் குழுவினர் பாத்திமாவின் தாய், சகோதரி குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்களிடம் பாத்திமாவைப் பற்றி விசாரிக்க கேரளா சென்றனர்.
இந்த நிலையில், பாத்திமா வழக்கை விசாரித்துவரும் மத்தியக் குற்றப் பிரிவு போலீசார் மூன்று பேராசிரியகளிடம் பாத்திமா தற்கொலை குறித்து மீண்டும் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை நேர்மையாக நடத்தப்படுகிறது என்பதை உறுதி செய்ய விசாரணை முழுவதும் வீடியோவாக பதிவுசெய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. விசாரணையை பற்றி தவறான தகவல்கள் வெளியாகக் கூடாது என்பதற்காக வேறெந்த தகவல்களையும் தெரிவிக்க போலீஸ் வட்டாரம் மறுத்துவிட்டனர். மேலும், மாணவி பாத்திமாவின் போன் இன்னும் முழுவதுமாக ஆய்வு செய்து முடிக்கவில்லை போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.