தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சேலம் பல்கலைக்கழகத்துக்குள் நுழைய முற்படுவாரேயானால், திமுக மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம், மதிமுக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம் (SFI), அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), முற்போக்கு மாணவர் கழகம் (RSF), முஸ்லிம் மாணவர் பேரவை (MSF), சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI), மாணவர் இந்தியா, அனைத்திந்திய கிராமப்புற மாணவர் சங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவர் அணி, தமிழ்நாடு மாணவர் முன்னணி (TSF) உள்ளிட்ட தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு (FSO – TN) சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் 120-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜெகநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்தச் சூழலில் ஜெகநாதனின் பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் ஊழல் குற்றச்சாட்டுகள் என தொடர்ச்சியான புகார்கள் எழுந்து வந்தது. தன்னை ஆர்எஸ்எஸ்காரர் என்றும், செய்யும் அத்தனை ஊழல்களையும் மத்திய பாஜக அரசு காப்பாற்றும் என்றும் கருதி செயல்பட்டு கொண்டிருப்பவர் தான் இந்த ஜெகநாதன்.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆய்வு எனக் கூறிக் கொண்டு, அனைத்து பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தை நாளை (ஜன.11) நடத்த உள்ளதாக அறிய வருகிறோம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“