அரசியல் விமர்சகர், யூடியூப்பர் சவுக்கு சங்கர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு நடத்திய வரும் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், பெண் காவலர்கள், காவல் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதாக ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை நிர்வாகியுமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக, பெலிக்ஸ் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து மீண்டும் ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதி டி.வி.தமிழ்செல்வி விசாரித்தார். இந்த வழக்கு விசாரணையின் போது காவல்துறை தரப்பில், சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என ஏற்கனவே ஃபெலிக்ஸ் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் ஆனால் அதையும் மீறி அவர் பேசி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
தனது பேச்சுக்கான விளைவை தற்போது உணர்ந்துவிட்டதாகவும் இனி இவ்வாறு பேச மாட்டேன் என்றும் பெலிக்ஸ் உறுதியளித்தார். தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பெலிக்ஸ் ஜெரால்ட்டுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், ஃபெலிக்ஸ் ஜெரால்ட் நடத்தி வரும் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலையும் மூட நீதிபதி
உத்தரவிட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“