க.சண்முகவடிவேல்
Felix Gerald | Savukku Shankar | Trichy: தமிழக காவல்துறையில் உள்ள பெண் காவலர்கர்களை தவறுதலாக பேசி வழக்கில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனியில் வைத்து கைது செய்த போலீசார் கோவை சிறையில் அடைத்தனர். அவர் மீது மேலும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியும், சிறையில் அடைக்கப்பட்டு வருகிறார்.
சவுக்கு சங்கர் மீதான அவதூறு வழக்கு நீதிமன்றத்தில் வந்தபோது அவர் பேசிய பேட்டியை யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்த ரெட் ஃபிக்ஸ் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார். இதனிடையே, லால்குடி டி.எஸ்.பி யாஸ்மின் எஸ்.பி வசம் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் கடந்த 10 ஆம் தேதி இரவு டெல்லியில் திருச்சி தனிப்படை போலீசார் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்டை கைது செய்தனர்.
இதன் பின்னர், அவர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார். அங்கிருந்து காவல்துறை வாகனம் மூலம் திருச்சிக்கு சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு இன்று பிற்பகல் அழைத்துவரப்பட்டார். போலீசாரின் விசாரணை முடிந்த பிறகு திருச்சி மயிலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்படுவார் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக தனது கணவருக்கு என்னவாயிற்று எங்கிருக்கிறார் என்ற விபரம் தெரியவில்லை என நேற்று இரவு அவரது மனைவி ஜேன்ஆஸ்டின் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க முயன்ற நிலையில் இன்று அவரது கணவர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“