Savukku Shankar | Felix Gerald: பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதாகவும், மகளிர் போலீசார் குறித்தும் பாலியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்ததாகவும் கூறி கோவை போலீசார் தேனியில் வைத்து கைது செய்தனர்.
கோவை சிறையில் அவரது கையை போலீசார் தாக்கி உடைத்ததாக குற்றம்சாட்டு வைத்த நிலையில், கோவையில் இருந்து திருச்சி அழைத்து வரப்பட்ட போது, பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட் ஃபிக்ஸ் யூடியூப் சேனல் ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு மீதும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டது. அவரை கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் வைத்து திருச்சி மாவட்ட போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், தனது கணவரின் நிலை பற்றி தெரியவில்லை என்று கூறி ஃபெலிக்ஸ் மனைவி ஜேன் ஆஸ்டின் திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பியிடம் முறையிட சென்றார். அதற்குள், அவர் திருச்சி சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் இருப்பது தெரியவந்தது. இதன்பின்னர் ஃபெலிக்ஸை நேரில் சந்தித்து பேசி விட்டு நள்ளிரவு சென்னை திரும்பினார்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஃபெலிக்ஸ் வீட்டை சோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்ற ஆணையுடன் போலீசார் சென்றனர். அப்போது, வீட்டிற்குள் அனுமதிக்காமல் ஜேன் ஆஸ்டின் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். முதலில் நீதிமன்ற ஆணையை முழுவதுமாக படித்து பார்த்து, போலீசார் தங்களது காலணிகளை அகற்றி விட்டு உள்ளே வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதை ஏற்றுக் கொண்டு அனைத்து போலீசாரும் தங்களின் ஷூக்களை கழற்றினர். எத்தனை பேர் உள்ளே வரப் போகிறீர்கள் என்று ஜேன் ஆஸ்டின் கேட்டார். அதற்கு 6 போலீசார் எனப் பதிலளித்தனர். அப்போது அவர் பேசுகையில், "எனக்கு நிறைய பயமிருக்கிறது. எதையாவது உள்ளே வைத்து விட்டு சென்றால் என்ன செய்வது? நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன்.
நீங்கள் உள்ளே வந்து எதையாவது செய்து, அதனால் எதும் சிக்கல் வந்தால் முழு பொறுப்பை நீங்கள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். வீட்டை காலி செய்து விட்டு செல்லும் நிலையில் நான் இல்லை. என்னுடைய மகன் 12வது முடித்து விட்டு கல்லூரியில் அட்மிஷன் போட்டுள்ளோம். அங்கு இந்த வீட்டு முகவரி தான் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, வீட்டை மாற்ற முடியாது என்றார்.
அனைவரும் உள்ளே சென்றதும், உடனிருந்தவர்கள் மூலம் வீடியோ பதிவு செய்ய தொடங்கினார். போலீசாரை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் உள்ளே சென்ற போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனையிடத் தொடங்கினர். வீட்டை சோதனை போட வந்த போலீசை ஃபெலிக்ஸ் மனைவி திணறடித்த நிலையில், அது தொடர்பான வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“