/indian-express-tamil/media/media_files/ZWBsjgJGAfFHXUvqAJjl.jpg)
திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதி, ஏட்டு மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில், திருச்சியைச் சேர்ந்த சாரங்கன் என்ற திருநங்கை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் சி.பி., - 1 தனிச்சிறையில், சில மாதங்களுக்கு முன் அடைக்கப்பட்டிருந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த மாரீஸ்வரன் என்ற சிறைக்காவலர், சாரங்கனை அடிக்கடி ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இது, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து சாரங்கன், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதியிடம் புகார் அளித்தும், இருவரும் அதைக் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
திருநங்கைக்கு தொல்லை
இதையடுத்து, திருநங்கை சாரங்கன் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்டப்பணிகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இலவச சட்டப் பணிகள் குழு ஆணையத்தில் இருந்து சுப்புராமன் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு, விசாரணை நடந்தது.
இந்த விசாரணையின் அடிப்படையில் சாரங்கனின் புகார்க்கு முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்த துறை ரீதியான விசாரணையும் நடைபெற்றது.
அதனடிப்படையில், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், டி.ஐ.ஜி., ஜெயபாரதி, ஏட்டு மாரீஸ்வரன் ஆகியோரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள், கடந்த 11ம் தேதி உத்தரவிட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இரு நாட்களுக்கு முன், டி.ஐ.ஜி., ஜெயபாரதியை வேலுார் பயிற்சிப் பள்ளிக்கு டி.ஐ.ஜி.,யாகவும், கண்காணிப்பாளர் ஆண்டாளை, திருச்சி பயிற்சிப் பள்ளிக்கு கண்காணிப்பாளராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
புகார் கிடப்பில் போட காரணம் இதுதான் காரணமா?
நான்கு மாதங்களுக்கு முனனர், சென்னையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றலாகி வந்த மாரீஸ்வரன், சென்னையில் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,யாக இருந்தவரின் வீட்டிலும், பின், புதிதாக உருவாக்கப்பட்ட பணியிடத்தில் உள்ள அதிகாரியிடமும் வேலை பார்த்துள்ளார்.
அந்த செல்வாக்கை வைத்தே, மாரீஸ்வரன் மீதான புகார் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் புகாரை கண்டுகொள்ளாமல் இருக்க, 50,000 ரூபாய் லஞ்சம் கைமாறி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கடந்த சில வருடங்களாக எந்தவித சர்ச்சைகளுக்கும் உள்ளாகாத டி.ஐ.ஜி யாரோ செய்த தவறுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது சிறைத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.