சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப், விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் இன்னும் மீள முடியாத சூழ்நிலையில் தான் தமிழகம் இருந்து வருகிறது. இந்த நிலையில், திருச்சி காஜாமலை பகுதியில் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் எம்.எஸ்.சி மண்ணியியல் (ஜியாலஜி) பிரிவில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி நேற்று முன்தினம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருப்பது பெரும் கவலையை உருவாக்கியிருக்கிறது.
பாரதிதாசன் வளாகத்தில் அமைந்திருக்கும் விடுதி அறையில் தங்கி படித்தி வந்த இவர், பல நாட்களாகவே, கல்வி ஆசிரியர் ( துறைத்தலைவர்) கொடுத்து வந்த அவமானங்களையும்,மனக் குமுறலையும் தாள முடியாமல் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார்.
அறையில் 'பினாயில்' இரசாயனத்தை குடித்து மயங்கி கிடந்தவரை, அவரின் நண்பர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். தற்போது, மருத்துவமனையில் தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற மாணவியை, துறைத் தலைவர் பலமுறை திட்டியுள்ளதாகவும், அசிங்கப்படுத்தியுள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே, பல முறை ஜியாலஜி டிபார்ட்மென்ட்டில் இந்த துறைத் தலைவரை எதிர்த்து மாணவர்கள் குரல் கொடித்திருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள், போலிசாரிடம் உரிய முறையில் புகார் மனுவை அளித்தனர். இதனையடுத்து, போலீசார் பாதிக்கப் பட்ட மாணவியின் நண்பர்கள், துறைத் தலைவர், மற்ற கல்வி ஆசிரியர்கள் என அனைவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.