தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபீஞ்சல் புயல், நவம்பர் 30-ம் தேதி பரங்கிப்பேட்டைக்கும் சென்னைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் துல்லியமாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வானிலை முன்னறிவிப்புகளை சென்னையில் உள்ள தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது் தென் மேற்கு வங்கக் கடலில் மையம் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ஃபீஞ்சல் (FENGAL) என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று (26-11-2024) காலை 08:30 மணி அளவீல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று
(27-11-2024) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, இலங்கை –திரிகோணமலைக்கு- தென் கிழக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில், நாகப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 370 கிலோ மிட்டர் தொலைவில், புதுவையில் இருந்து தென் கிழக்கே 470 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென் கிழக்கே 550 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும். அதன் பிறகு, மேலும் வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப் பகுதிகளை நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (27-11-2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஃபீஞ்சல் புயல், நவம்பர் 30-ம் தேதி பரங்கிப்பேட்டைக்கும் சென்னைக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சுயாதீன வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் துல்லியமாக அறிவித்துள்ளார்.
நவம்பர் 30ம் தேதி வரை அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் டிசம்பர் 2ம் தேதி வரை சென்னையில் மழை தொடர வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
சென்னையில் இன்று (நவம்பர் 27) லேசானது முதல் மிதமான மழை இருக்கும், நவம்பர் 28ம் தேதி மிதமான மழை இருக்கும், நவம்பர் 29-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நவம்பர் 30-ம் தேதி மிக கனமழை முதல் அதி கனமழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார். நவம்பர் 30-ம் தேதி ஃபீஞ்சல் புயல் கடந்து சென்ற பிறகும், டிசம்பர் 1, 2 தேதிகளிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும், கொங்கு மண்டலத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“