டாக்டர் ரம்யா மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு பின்னர் குண்டர் சட்டத்தில் அடைக்கபட்ட தனியார் கருத்தரிப்பு மைய இயக்குனர் தாமஸ்க்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் வி.எம்.தாமஸ் என்பவர் சென்னை பெர்ட்டிலிட்டி சென்டர் என்ற பெயரில் குழந்தையின்மை சிகிச்சை மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மையத்தின் இயக்குனராக தாமஸ் இருந்து வருகின்றார்.
இந்த மையத்தில் பெரம்பூர் பட்டேல் சாலையில் வசிக்கும் டாக்டர். ரம்யா ராமலிங்கம் என்பவர் வேலை செய்தார்.
இந்நிலையில் ரம்யா வேலையிலிருந்து விலகினார். தனியாக கோயம்பேடு அருகே கிளினிக் துவங்கினார்.
ரம்யாவை மீண்டும் தாமஸ் நடத்திவந்த மருத்துவமனையில் வேலைக்கு வர அழைத்த போது இதனை டாக்டர் ரம்யா மறுத்ததாக தெரிகின்றது.
இதனால் கோபமடைந்த தாமஸ், ரம்யா மீது கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் டாக்டர் ரம்யா கடுமையான வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினர்.
இது தொடர்பாக தாமஸ் உள்ளிட்டோர் கைது செய்யபட்டனர். பின்னர் தாமஸ் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கடந்த மாதம் 4 ஆம் தேதி உத்தரவிட்டார்.
தடுப்பு காவல் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த கமிஷனர் உத்தரவை எதிர்த்து தாமஸ் மனைவி அன்னக்கிளி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், சென்னை கமிஷனர் இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது. மனதை ஒருநிலைப்படுத்தாமல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளர். எனவே இந்த உத்தரவு சட்டவிரோதமானது. இதனை, ரத்து செய்து எனது கணவரை விடுவிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், சதீஸ்குமார் ஆகியோர் அடங்கி டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அளித்த கோரிக்கை மனுவை சம்மந்தபட்ட அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலனை செய்து உத்தரவிடவில்லை. எனவே மனுதரார் கணவருக்கு எதிராக தடுப்பு காவல் சட்டத்தில் (குண்டர் சட்டத்தில்) அடைத்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.