பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உலகளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு என்றாலே தனி வரவேற்பு இருக்கும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கு இந்தியா மட்டுமின்றி உலகளவில் பார்வையாளர்கள் வருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று தொடங்கியது.
இந்த போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர். அதன்பிறகு விழா மேடைக்கு சென்று அமந்தனர். அப்போது இவர்களுக்கிடையே நடைபெற்ற விவாதம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த விவாதத்தால், முதல்வரும் துணை முதல்வரும் வெளியில் ஒற்றுமையாக இருப்பது போல் இருந்தாலும் உள்ளுக்குள் ஒருவித பகையுடன்தான் இருப்பார்களோ என்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
நேற்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க வந்த முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று, வரவேற்புரை பேசிய அமைச்சர் உதயகுமார், ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தது குறித்து முதல்வர் பேசுவார் என்று கூறியுள்ளார். ஆனால் அரசு விழாக்களில், அமைச்சர்கள் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பேசிய பிறகே முதல்வர் பேசுவார் என்பதை எண்ணி, முதல்வர் பழனிச்சாமி நீங்கள் பேசுங்கள் என்று துணை முதல்வரிடம் கூறுகிறார்.
ஆனால் துணை முதல்வர் பன்னீர்செல்வம், இது ஒன்றும் அரசு விழா இல்லை, நீங்கள் போய் பேசுங்கள் என்று தெரிவித்துள்ளார். ஆனாலும் முதல்வர் பேச செல்லாத நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி பேச சொல்லியதால் மேடையில் சில நிமிடங்கள் பெரும் பரபரப்பு நிலவியது. இறுதியாக வேறு வழியின்றி முதல்வர் பழனிச்சாமியே முதலில் பேசினார். இதனையடுத்து துணை முதல்வர் பேசினார்.
மேடையில் நடந்த இந்த விவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று நம்பிக்கொண்ட்டிருந்த மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"