வன்முறையை தூண்டும் வகையில் பேட்டி கொடுத்துள்ளதால் இயக்குனர் பாரதிராஜா மீது காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இயக்குனர் அமீருக்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நடைப்பெற்ற கூட்டம் ஒன்றில் இயக்குனர் பாரதிராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் மாவோயிஸ்டு மற்றும் நக்சலைட்டு இயக்கம் எதுவும் இல்லை என்றும், அப்படியொரு சூழலை ஏற்படுத்தி விடாதீர்கள்” என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்து மக்கள் முன்னணியின் மாநில அமைப்பாளர் வடபழனி போலீஸ் நிலையத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக பாரதிராஜா மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அந்த ,மனுவில், இயக்குனர் பாரதிராஜா தமிழக அரசை மிரட்டும் விதமாகவும், தேசத்துக்கு விரோதமாகவும் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தும் அவர் மீண்டும் மிரட்டும் பாணியில் பேசி வருவது கண்டிக்கத்தக்க செயல். எனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரை ஆய்வு செய்த சென்னை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் புகார் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரி திருவல்லிக்கேணி போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி திருவல்லிக்கேணி போலீசார், சர்சைக்குரிய பேச்சு (ஐபிசி 153), பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசியது (505/1பி) ஆகிய பிரிவுகளின் கீழ் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.