கோடை சீசனை முன்னிட்டு மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் நாளை முதல் 3 மாதங்களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் ஆகும். இதனை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்.
இதனால் நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் நாளை (ஏப்ரல் 1) முதல் ஜூன் 5-ந்தேதி வரை சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட தோட்டகலைத்துறைக்கு சொந்தமான 7 இடங்களில் படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழம் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழாக்கள் நடத்தப்பட உள்ளன.