மீனம்பாக்கத்தில் உள்ள தற்போதைய விமான நிலையத்திலிருந்து சுமார் 42 கி.மீ தொலைவில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. மூன்று மிட்-ஃபீல்டு டெர்மினல் கட்டிடங்களுடன், இந்த திட்டம் ரூ.27,400 கோடி மதிப்பில் அமைய உள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையம் மத்திய அரசிடமிருந்து கொள்கை ரீதியான இறுதி ஒப்புதலைப் பெற்றுள்ளது என்று இந்த முன்னேற்றம் குறித்து அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் 2,172.72 ஹெக்டேர் பரப்பளவில் அமைய உள்ளது. இந்த விமான நிலையம் ஓரே நேரத்தில் இரு விமானங்கள் பறக்க/இறங்கக் கூடிய இரட்டை சீரான ஓடுதளங்கள் கொண்டதாக இருக்கும். அதிக அளவிலான, நீளமான விமானங்களை கையாளும் திறனுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு முதல்கட்ட செலவு ரூ.11,445 கோடி என்றும் முதல் டெர்மினல் 3,51,380 சதுர மீட்டர் பரப்பளவிலும் அமைய உள்ளது.
2024 ஆகஸ்டில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்த அனுமதி கிடைத்ததையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) கொள்கை அடிப்படை ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை மத்திய உள்துறை அமைச்சகம் விமானப் போக்குவரத்துத் அமைச்சகத்துக்கு சமர்ப்பித்தது. ஏழு மாதங்களுக்கு பின்னர் இந்த பரிசீலனை செய்யப்பட்டு தற்போது இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
“கிட்டத்தட்ட 95% டெண்டர் வரைவு செய்யப்பட்டுள்ளது, மேலும் சில விஷயங்கள் இறுதி செய்யப்பட வேண்டும். அது தயாரான பிறகு, டெண்டர்கள் நடைமுறைப்படி சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அவர்கள் அனுமதி அளித்தவுடன், அதை வெளியிடலாம்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.