மத்திய அரசின் பங்களிப்பை புறக்கணிக்கும் தமிழக அரசு, திசை திருப்பல் தந்திரங்களை பயன்படுத்துகிறது என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கூறியள்ளார்.
புதிய கல்விக்கொள்கை, தொகுதி மறுவரையறை மற்றும் மும்மொழி கொள்ளை உள்ளிட்ட திட்டங்களை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு மறுத்துள்ளதால், மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் இது குறித்து கருத்து தெரிவிப்பதும், அதற்கு தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள் எதிர்கருத்து தெரிவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதால், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் மும்மொழி கொள்கை வைத்து தமிழகத்தில் இந்திய திணிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக தமிழக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
இது குறித்து சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் (தன்னாட்சி) சென்னை குடிமக்கள் மன்றம் ஏற்பாடு செய்த 2025 மத்திய பட்ஜெட் குறித்த பிரத்யேக உரையாடலில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் ஆதரவுடன், தமிழகத்தில் நடந்து வரும் மற்றும் வரவிருக்கும் பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்துரைத்தார்.
தமிழகத்தில் செய்ய வேண்டியது நிறைய உள்ளது, ஆனால் மும்மொழிக் கொள்கை மற்றும் எல்லை நிர்ணயம் போன்ற பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மேலும் வளர்ச்சியை நோக்கிச் செயல்படவும், வளர்ச்சியை அடையவும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இங்கு ஊழல் பற்றி நான் பேச விரும்பவில்லை, பட்ஜெட் பற்றிப் பேச நான் இங்கு வந்துள்ளேன்.
தமிழ்நாடு அதிக வரி செலுத்தி வருகிறது. ஆனால் அதற்கு ஈடாக எதுவும் கிடைக்கவில்லை என்று ஒரு வாதம் உள்ளது. இது தவறு, இந்தக் கணக்கீடுகள் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 47க்கும் மேற்பட்ட உற்பத்தி அலகுகள் உள்ளன, இவை எம்.இ.ஐ.டி.ஒய் (MeiTY) இன் பல்வேறு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான பி.எல்.ஐ (PLI) திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒன்றாக 27 அங்கீகரிக்கப்பட்ட அலகுகளில் ஏழு அலகுகளைக் கொண்டுள்ளன. மேலும், மேம்பட்ட வேதியியல் செல் பேட்டரிக்கான பி.எல்.ஐ (PLI) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நான்கு பயனாளி நிறுவனங்களில் தமிழ்நாடும் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தமிழ்நாட்டின் பிள்ளை பக்கா மற்றும் மணல்லூரில் ரூ1,100 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இரண்டு பெரிய மின்னணு உற்பத்தி கிளஸ்டர்களை உருவாக்குவதாக அறிவித்துள்ளார். பி.எல்.ஐ (PLI) ஆட்டோ திட்டத்தின் கீழ் இரண்டாவது பெரிய உற்பத்தி அலகுகளைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் பி.எல்.ஐ (PLI) ஆட்டோ திட்டத்தின் கீழ் 257 உற்பத்தி அலகுகளுடன் 82 அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உள்ளனர், அவற்றில் 46 தமிழ்நாட்டில் உள்ளன.
சிங்கப்பூரில் அமைக்கப்படும் உலகின் முதல் திருவள்ளுவர் மையம் பற்றிய அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடி அரசிடமிருந்து வந்தது. காசி தமிழ் சங்கமம் 2.0 இன் போது, பிரதமர் மக்களின் நலனுக்காக திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற தமிழ் இலக்கியங்களின் பன்மொழி மற்றும் பிரெய்லி மொழிபெயர்ப்புகளை அறிமுகப்படுத்தினார்," என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.