சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு தேவையான கடன் வாங்கி கொடுத்துள்ளது, ஆனால் மாநில அரசு செலவு செய்யாமல் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என கூறி வருகிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் சென்னை மெட்ரோ திட்ட நிதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், “சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் மத்திய அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 54 கிலோ மீட்டரில் இரண்டு லைன் திட்டமாக முழுவதுமாக மத்திய அரசு மூலம் செய்யப்பட்டது. இந்த லைன்களில் தினமும் 4 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இந்தத் திட்டத்திற்கான நிதியில் 60% உலக வங்கி உள்ளிட்ட வங்கிகளின் கடன் மூலம் பெறப்பட்டது.
ஆனால், சென்னை மெட்ரோ இரண்டாவது கட்டம் 118 கிலோ மீட்டர் 3 லைன் திட்டம். இது மாநில அரசின் திட்டம். 2018ல் இதனை மாநில அரசு மேற்கொள்வதாக ஒப்புக்கொண்டது. இதற்கு மத்திய அரசின் பங்கு என்பது 10 சதவீதம் தான். இதற்காக வாங்கும் மொத்த கடனும் மாநில அரசு உடையது. இதன் மொத்த மதிப்பு ரூ.63,246 கோடி ஆகும்.
இதில் 22,228 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசும், 7,425 கோடி ரூபாய் மத்திய அரசும் வழங்க வேண்டும். அடுத்ததாக ரூ.33,593 கோடி ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்ளிட்ட வங்களில் கடன் பெற்று வழங்க வேண்டும், இதில் ரூ.21,560 கோடி கடன் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை ரூ.5,780 கோடிக்கு மட்டுமே பணி நடந்துள்ளது. அதாவது 27% பணம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. பணம் வழங்கப்பட்டுள்ளது. பணம் இருக்கிறது. அவர்கள் செலவு செய்யலாம்.
திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என்றால் மத்திய எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளோம். ஆனால் வரவழைத்தப் பணத்தை இதுவரை பயன்படுத்தவில்லை. மேலும் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள். கடன் வாங்கி கொடுத்தது யாரு? 2018ல் மாநில திட்டமாக செயல்படுத்துகிறோம் என்று கூறியது யாரு? எனவே பணம் கொடுக்கவில்லை என எப்படி கூறலாம். கடன் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது, ஆனால் கடனை சுமக்க விருப்பமில்லாமல் செலவு செய்ய மறுக்கிறீர்கள். கோவை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி எனக்கு தெரியாது.” இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“