Advertisment

பைனான்சியர் அன்புச் செழியனுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை - ராமதாஸ் பகீர் அறிக்கை!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் கந்துவட்டிக்காரர் அன்புச் செழியன் சந்தித்து உண்மை என்றால்,,,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பைனான்சியர் அன்புச் செழியனுடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை - ராமதாஸ் பகீர் அறிக்கை!

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரையில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கந்து வட்டிக்காரர் அன்புசெழியனும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மை என்றால் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

Advertisment

செல்லூர் ராஜுவின் இல்ல நிகழ்வில் அனைத்து அத்துமீறல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடமிருந்து அவரவர் நிலைக்கு ஏற்ப ‘அன்பளிப்புகள்’ மிரட்டிப் பறிக்கப்பட்டிருக்கின்றன. அன்பாக பெறப்பட்ட பரிசுகளின் மதிப்பு மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விழாவுக்காக மதுரை மாநகரம் முழுவதும் விதிகளை மீறி பதாகைகளும், அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயலில் சிக்கி நூற்றுக்கணக்கான மீனவர்கள் உயிரிழந்த போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உடனடியாக ஆறுதல் சொல்ல செல்லாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்களுடன் சென்று வாழ்த்தியிருக்கிறார். இந்த காதணி விழாவில், தேடப்படும் குற்றவாளியான கந்துவட்டி அன்புசெழியனும் கலந்து கொண்டிருக்கிறார். இந்த விழாவில் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அன்புசெழியனுக்கு அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும் வணக்கம் தெரிவித்ததாக இணைய ஊடகங்களில் செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

விழாவின் முடிவில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விருந்து சாப்பிட்ட அறைக்குள் நுழைய அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாகவும், அந்த அறைக்குள் கந்துவட்டி அன்பு செழியன் மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதைத் தொடர்ந்து மூடப்பட்ட அறைக்குள் ஆலோசனை நடந்ததா? பேரங்கள் நடந்ததா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. கந்துவட்டி அன்புசெழியன் யார்? என்பதை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு நவம்பர் 21-ஆம் தேதி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். திரைப்படம் தயாரிக்க கந்துவட்டி அன்பு செழியனிடம் கோடிக் கணக்கில் அவர் கடன் வாங்கியிருந்ததா தெரிகிறது. அதை முறையாக திரும்ப செலுத்தாதற்காக அவரை கொடுமைப்படுத்திய அன்பு செழியன் கும்பல், அவரது குடும்பப் பெண்களைப் பற்றியும் அவதூறாகப் பேசியதால் தான் அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக அவரே கடிதம் எழுதி வைத்துள்ளார். இதனடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கில் அன்புச் செழியனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அசோக்குமார் தற்கொலை வழக்கில் அன்பு செழியனின் முன்பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அவரைக் கைது செய்ய நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. அவர் தொடர்ந்து தேடப்படும் குற்றவாளியாகவே உள்ளார். அவரை தமிழக அமைச்சரவையில் ஐந்தாவது இடத்தில் உள்ள அமைச்சர் அவரது இல்ல விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கிறார். அங்கு வரும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு வணங்குகிறார்கள். இவற்றுக்கெல்லாம் மேலாக முதல்வரும், துணை முதல்வரும் தனி அறையில் தேடப்படும் குற்றவாளியுடன் ஆலோசனை நடத்துகிறார்கள் என்றால், தமிழ்நாட்டில் சட்டம், நீதி, தருமம் ஆகியவை எந்த அளவுக்கு காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன என்பதை உணரலாம்.

அசோக்குமார் தற்கொலை வழக்கில் தேடப்படும் அன்புசெழியனை தமிழகத்தின் அதிகார நிலையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஒருவர் தான் காப்பாற்றி வருவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. அவரை காவல்துறை தேடி வந்த போது தர்மயுத்தம் நடத்தியவரின் புதல்வர்கள் தான் பாதுகாத்ததாக கூறப்பட்டது. இப்போது அன்புசெழியன் வெளிப்படையாக நடமாடுவதன் மூலம் அப்புகார்கள் உண்மையாகியுள்ளன.

கடந்த காலங்களில் முதலமைச்சர் உள்ளிட்ட உயர்பதவியில் இருந்தவர்கள், தேடப்படும் குற்றவாளி தங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட அவர்களை சந்திக்க அனுமதித்ததில்லை. முந்தைய ஆட்சிக்காலத்தில் குற்றவழக்கில் சட்டப்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமது உறவினரை மூத்த அமைச்சர் ஒருவர் முறைப்படி நேரில் சென்று பார்த்ததே பெரும் சர்ச்சையானது. ஆனால், இப்போது தேடப்படும் குற்றவாளியை முதலமைச்சர் பழனிச்சாமி தனி அறையில் சந்தித்து பேசியது மன்னிக்க முடியாத குற்றமாகும். இதன்மூலம் முதலமைச்சர் பதவியை அவர் களங்கப்படுத்தி உள்ளார். குற்றவாளியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் செல்லூர் ராஜு உள்ளிட்ட அமைச்சர்கள் இனியும் பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டனர். அவர்கள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Ramadoss Anbu Chezhiyan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment