ஜாமீன் மனுவை திரும்பப் பெற்ற பைனான்சியர் அன்புச் செழியன்!

அசோக்குமார் தற்கொலை வழக்கில், முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார்

By: November 30, 2017, 6:00:00 PM

நடிகர் சசிகுமாரின் உறவினரும், அவரது படநிறுவனத்தின் இணை தயாரிப்பாளருமான அசோக்குமாரை
தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்றார்.

நடிகர் சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக இருந்தார். இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி அசோக் குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சினிமா பைனான்சியர் அன்புச் செழியன் தான் காரணம் எனக் கூறி, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘தாரை தப்பட்டை’ படத்திற்கு வாங்கிய கடனை வட்டி, வட்டிக்கு வட்டியுடன் செலுத்தாவிட்டால், வரும் 30 ஆம் தேதி வெளியாக உள்ள ‘கொடி வீரன்’ படத்தை வெளியிடவிடாமல் தடுத்து விடுவதாக அன்புச் செழியன் மிரட்டியதாக கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனக்கும், அசோக்குமாருக்கும் இடையில் எந்தவித பரிவர்த்தனையும் கிடையாது எனவும், சசிகுமாருடன் மட்டுமே பரிவர்த்தனைகள் இருந்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

மேலும், அசோக்குமாரின் தற்கொலை கடிதத்தில் கூறியுள்ள விவரங்களை பார்க்கும் போது சினிமாத்தனமாக இருப்பதாகவும், பலவீனமான மனநிலையில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதற்காக மற்றொருவர் மீது பழி போட முடியாது எனவும் தனக்கு எதிரான புகாரில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆதிநாதன் அமர்வு முன் விசாரணைக்காகப் பட்டியலிடப்பட்டிருந்தது. அப்போது அன்புச்செழியன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை திரும்ப பெற அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Financier anbu chezhiyan withdraw his bail plea from high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X